| ADDED : அக் 05, 2024 09:55 AM
பெங்களூரூ: சாவர்க்கர் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறிய கர்நாடகா அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கெண்ட சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, பசு வதையை சாவர்க்கர் எதிர்க்கவில்லை என்றும், பிராமண சமூகத்தைச் சேர்ந்த அவர் அசைவத்தை விரும்பி சாப்பிடுவார் என்றும் கூறினார். ஆனால், சைவ உணவை மட்டுமே சாப்பிடும் காந்தி, இந்து மதம் மீது அதிக நம்பிக்கை கொண்டவராகவும், அவரது நடவடிக்கை இருக்கும் என்று கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பஜ்ரங் தளம் தலைவரும், சமூக ஆர்வலருமான தேஜஸ் கவுடா, அமைச்சர் தினேஷ் கவுடா மீது போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் கூறியதாவது: ஊடகங்கள் மற்றும் பொது இடங்களில் பேசும் போது, அமைச்சர் தனது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். வீர் சாவர்க்கர் குறித்து தேவையில்லாத கருத்துக்களை கூறியுள்ளார். அவர் கூறிய கருத்துக்களுக்கு ஆதாரம் இருக்கிறதா? உங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு சாவர்க்கரை சித்தரிக்கலாமா?சாவர்க்கர் குறித்து விவாதம் நடத்த தயாரா? அமைச்சரே தேதி, இடம், நேரத்தை குறித்து சொல்லட்டும். அவரது பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் வதந்திகள் குறித்து விவாதம் நடத்த தயார். உங்கள் பொறுப்பை உணர்ந்து மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும், எனக் கூறினார்.