குமார் சந்திரசேகரநாத சுவாமிகள் மீது வழக்கு
பெங்களூரு, : 'முஸ்லிம்களுக்கு ஓட்டுரிமையை ரத்து செய்ய வேண்டும்' என கூறிய விஸ்வ ஒக்கலிகர் மடாதிபதி குமார் சந்திரசேகரநாத சுவாமிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.விவசாயிகளின் நிலத்தை வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பெங்களூரில் இம்மாதம் 26ல் பாரதிய கிசான் சங்கம் போராட்டம் நடத்தியது. இதில் விஸ்வ ஒக்கலிகர் மடாதிபதி குமார் சந்திரசேகரநாத சுவாமிகள் பங்கேற்றார்.அவர், 'முஸ்லிம்களுக்கு ஓட்டுரிமையை ரத்து செய்ய வேண்டும். நாட்டில் வக்பு வாரியம் இல்லை என்றால், அமைதி நிலவும்' என்று பேசியிருந்தார். இதை எதிர்த்து, சாம்ராஜ்பேட்டையின் வால்மீகி நகரைச் சேர்ந்த சையது அப்பாஸ், உப்பார்பேட்டை போலீசில் நேற்று புகார் அளித்தார்.அதில், 'முஸ்லிம்களுக்கு ஓட்டுரிமையை ரத்து செய்ய வேண்டும். நாட்டில் வக்பு வாரியம் இல்லை என்றால், அமைதி நிலவும் என்று விஸ்வ ஒக்கலிகர் மடாதிபதி குமார் சந்திரசேகரநாத சுவாமிகள் கூறியுள்ளார். அவரின் பேச்சு, விரோதத்தை துண்டும் வகையில் உள்ளது. முஸ்லிம்களின் மனதையும் காயப்படுத்தி உள்ளது. இரு மதங்களுக்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய சுவாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.இதையடுத்து, சுவாமிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.