உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு

'நாடு சுதந்திரம் பெற்ற பின், முதல் முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து இது நடத்தப்படும். இதற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது,'' என, மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று தெரிவித்தார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில், 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.இது தொடர்பாக, ராணுவம், பாதுகாப்பு உள்ளிட்ட பல மத்திய அமைச்சரவை குழு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அந்த வரிசையில், அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டில்லியில் நேற்று நடந்தது.இதன் முடிவில் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அறிவிப்புகளை எதிர்பார்த்த நிலையில், எதிர்பாராத அறிவிப்பு வெளியானது.கூட்டத்திற்கு பின், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நிருபர்களிடம் கூறியதாவது:வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்துவதற்கு, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தொடர்ந்து பேசி வரும் காங்கிரஸ், அது ஆட்சியில் இருந்தபோது, இதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. உண்மையில், அந்தக் கட்சி, ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரானது.ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதை, தன் அரசியலுக்கான ஒரு ஆயுதமாகவே காங்கிரஸ் அரசு பயன்படுத்தி வந்துள்ளது.மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, 2010ல், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என, லோக்சபாவில் தெரிவித்தார்.இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. பல அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. ஆனாலும், கண் துடைப்பு நடவடிக்கையாக, 'காஸ்ட் சென்சஸ்' எனப்படும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல், 'காஸ்ட் சர்வே' எனப்படும் மாதிரி கணக்கெடுப்பை நடத்தினர்.இதில் இருந்து, காங்கிரசும், அது இடம்பெற்றுள்ள 'இண்டி' கூட்டணியில் உள்ள கட்சிகளும், ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதை வெறும் அரசியல் ஆயுதமாகவே பயன்படுத்தின என்பது தெளிவாக தெரியும்.கடைசியாக, 1931ல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு பின், அடுத்து நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், முழுமையான ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.மக்களிடம் இருந்து இந்தத் தகவல்கள், மிகவும் வெளிப்படையாகவும், திட்டமிட்ட நடைமுறைகளின்படியும் பெறப்பட்டு தொகுக்கப்படும். இந்த கணக்கெடுப்பு மிகவும் துல்லியமாகவும், திறந்த மனதுடனும் நடத்தப்படும். சிறப்பான கொள்கை திட்டமிடலுக்கு இது மிகவும் உதவும்.மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது மத்திய பட்டியலில் உள்ளன. அதனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியதாக, சில மாநிலங்கள் கூறுவது தவறாகும். அது மாதிரி கணக்கெடுப்புதான்.மேலும், அது அரசியல் நோக்கத்துக்காக நடத்தப்பட்டவை. அந்தத் தகவல்களில் உண்மை தன்மை, வெளிப்படைதன்மை இல்லை. அவை மக்களிடையே குழப்பத்தையும், சந்தேகத்தையும், கேள்வியையும், நம்பிக்கையின்மையுயம் ஏற்படுத்தியுள்ளன.இவற்றை மனதில் வைத்தே, சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்புகளை முன்வைத்து, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசு முடிவு செய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக, பல மாநிலங்களில் உள்ள கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பீஹார், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவில் கடந்த சில ஆண்டுகளில், இவ்வாறு மாதிரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டன.

எப்போது நடக்கும்?

கடைசியாக நம் நாட்டில், 2011ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2021ல் நடந்திருக்க வேண்டும். ஆனால், 2020ல் கொரோனா பரவலைத் தொடர்ந்து அது ஒத்திவைக்கப்பட்டது.நிருபர்களை சந்தித்து அமைச்சரவை குழு கூட்டத்தின் முடிவுகளை தெரிவித்த அஸ்வினி வைஷ்ணவ், கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்தார். மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடக்கும் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.

கரும்பு கொள்முதல் விலை உயர்வு

கரும்பு விவசாயிகள், அவற்றை சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கும்போது, கொள்முதல் செய்வதற்கான, எப்.ஆர்.பி., எனப்படும் நியாயமான கொள்முதல் விலையை மத்திய அரசு நிர்ணயிக்கிறது.நடப்பு 2024 - 25 ஆண்டில், குவிண்டாலுக்கு, 340 ரூபாயாக இது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும், அக்டோபரில் துவங்கும், 2025 - 26 ஆண்டுக்கான இந்த கொள்முதல் விலை, 4.41 சதவீதம் உயர்த்தப்பட்டு, குவிண்டாலுக்கு, 355 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.'கால நிர்ணயம் அவசியம்'டில்லியில் நேற்று, காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியதாவது:ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக் காட்டுவோம் என, பார்லி.,யில் கூறியிருந்தோம். தற்போது, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்கு மத்திய அரசு பணிந்துள்ளது. 11 ஆண்டுகளுக்கு பின், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி ஒருவழியாக ஒப்புக் கொண்டுள்ளார். இதை நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்த வேண்டும். இதற்கு கால நிர்ணயம் அவசியம். அதாவது, கணக்கெடுப்பு எப்போது துவங்கி எப்போது முடிவடையும் என்பதை அறிவிக்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பில், தெலுங்கானா காங்., அரசு முன்மாதிரியாக உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு முழு ஆதரவு வழங்குகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

தலைவர்கள் வரவேற்பு

முதல்வர் ஸ்டாலின்: ஜாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும், எப்போது நிறைவடையும் என்ற முக்கியமான கேள்விகளுக்கு பதில் இல்லை. பீஹார் தேர்தலை கருதி, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக அரசுக்கும், தி.மு.க.,வுக்கும், இது சிறப்பான வெற்றி. ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி, முதன் முதலாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது தமிழகம் தான்.அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அதை தி.மு.க., அரசு கைவிட்டு விட்டது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என, 1998 முதல் பா.ம.க., குரல் கொடுத்து வருகிறது. இது, பா.ம.க.,வின் 30 ஆண்டு கால முயற்சிக்கு கிடைத்த பலன். த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன்: ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால், ஏழை, எளிய, நடுத்தர மக்களின், வாழ்க்கைத்தரம் உயரும். ஒட்டு மொத்த மக்கள் தொகையை கணக்கிடுவதும், மக்களின் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: ஜாதிவாரி கணக்கெடுப்பை மையமாக வைத்து, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்தவர்களின் அரசியல் சதியை உடைத்தெறிந்த, பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் நன்றி. பிரதமர் மோடி மட்டும் தான், உண்மையான சமூக நீதியின் காவலராக விளங்குகிறார் என்பது, மீண்டும் ஒரு முறை உறுதியாகி உள்ளது. தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: கடந்த, 2020ல் அ.தி.மு.க., அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, குலசேகரன் ஆணையத்தை அமைத்தது. இந்த பணியை முடிக்க ஆணையம், கூடுதலாக ஆறு மாத அவகாசம் கோரியது. ஆனால், 2021ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரசு மறுத்து விட்டது. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்திருப்பது சமூக, சமத்துவத்தை வெளிப்படுத்துகிறது. - நமது சிறப்பு நிருபர் - '


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

vadivelu
மே 01, 2025 21:51

தமிழ் நாட்டில் பிற மொழியாளர்கள் சாதி பார்த்து அடையாள்ம் காண பட்டு வி டுவார்கள். அவர்கள் திராவிடர்கள் என்றும், மற்றவர்கள் தமிழர் என்றும் சாதியைக்குறிப்பிட்டு டுவார்களோ


திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 01, 2025 15:32

The new Census exercise will also lead to delimitation for seats in Lok Sabha and the implementation of the 33% reservation for women in Parliament and the State Assemblies.


A.Gomathinayagam
மே 01, 2025 14:04

சாதிகள் இல்லையடி பாப்பா .இனி சாதி ஒழிய வழியில்லை .சாதி சண்டைகள் இந்தியா முழுவதும் இருக்கவே வாய்ப்பு


abdulrahim
மே 01, 2025 13:28

காஷ்மீர் தாக்குதல் பற்றி இனி பேசுவீங்க? ஊடகத்திற்கு அடுத்த பரபரப்பு கிடைத்து விட்டது, ஏன் என்றால் தாக்குதல் சம்பவத்தை கிளற கிளற படுகுழி ஜனதா இதில் சம்பந்தப்பட்டது அம்பலமாகும்.


ஆரூர் ரங்
மே 01, 2025 12:54

தெலங்கானாவில் சாதிக் கணக்கெடுப்பு நடத்தி BC ,SC, ST, MC 80 சதவீதம் இருப்பதாக அறிவித்தது காங்கிரஸ் அரசு. ஆனால் (சோனியாவால நியமிக்கப்பட்ட) முதலமைச்சர் மட்டுமல்ல முக்கால்வாசி முக்கிய அமைச்சர்களும் முற்பட்ட வகுப்பினர்தான். . இதற்கு எதுக்கு கோடிகளில் செலவழித்து கணக்கெடுப்பு?.ஊரை ஏமாற்ற மட்டுமே.


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 01, 2025 12:17

குடிமக்கள் சார்ந்துள்ள மதமும் கணக்கில் கொள்ளப்படுமா ??


Rajah
மே 01, 2025 12:15

தங்களுக்கு வெற்றி என்று கொக்கரிக்கும் இந்தக் கூட்டம் படுதோல்வியைக் காணப்போகின்றது.


Rajah
மே 01, 2025 11:06

முதலில் சட்டவிரோத குடியேறிகளை அகற்றி விட்டு ஜனத்தொகை கணக்கெடுப்பு நடத்தவேண்டும்.


Rajah
மே 01, 2025 11:03

ராவுத்தர், கவுஸ், லெப்பை என்று முஸ்லிம்களுக்கு சாதியைக் குறிப்பிடுவார்களா? அதே போல் கிறிஸ்தவர்களை நாடார், மீனவர் என்று குறிப்பிடுவார்களா? இந்த மதங்களில் ஜாதி இல்லையே.


அப்பாவி
மே 01, 2025 10:20

பேசாம எல்லா ஜாதியற்கும் 10 பர்சண்ட் ஒதுக்கிடலாம். கியூவில் எவன் முண்டியடித்துக் கொண்டு வர்ரானோ அவனுக்கே முன்னுரிமை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை