உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் மீது சிசிடிவி ஊழல் வழக்கு

ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் மீது சிசிடிவி ஊழல் வழக்கு

புதுடில்லி: டில்லியில், 'சிசிடிவி' திட்டத்தில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீது, ஊழல் தடுப்பு பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர். தலைநகர் டில்லியில் கடந்த, 10 ஆண்டுகளாக, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவி வகித்தார். பிப்ரவரியில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,விடம் அவர் தோற்றதை அடுத்து, ரேகா குப்தா முதல்வரானார்.கடந்த 2019ல், கெஜ்ரிவால் அமைச்சரவையில், ஆம் ஆத்மி மூத்த தலைவர் சத்யேந்தர் ஜெயின், பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்தார். அந்த சமயத்தில், டில்லி முழுதும் 1.4 லட்சம் சிசிடிவி கேமராக்களை பொருத்த, பி.இ.எல்., எனப்படும், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு, அப்போதைய ஆம் ஆத்மி அரசு ஒப்பந்தம் கொடுத்தது.இத்திட்டத்தின் நோடல் அதிகாரியாக, சத்யேந்தர் ஜெயின் இருந்தார். சிசிடிவி கேமராக்களை நிறுவுவதில் ஏற்பட்ட தாமதத்தால், பி.இ.எல்., நிறுவனம் மற்றும் அதன் ஒப்பந்ததாரர்களுக்கு, 2019 ஆகஸ்டில், அப்போதைய ஆம் ஆத்மி அரசு, 16 கோடி ரூபாயை அபராதமாக விதித்தது. எனினும், இந்த அபராதத்தை சத்யேந்தர் ஜெயின் தன்னிச்சையாக தள்ளுபடி செய்தார். இதற்கு பி.இ.எல்., நிறுவனத்திடம் இருந்து, 7 கோடி ரூபாயை அவர் லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், 571 கோடி ரூபாய் மதிப்பிலான சிசிடிவி திட்டத்தில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீது, டில்லி ஊழல் தடுப்பு பிரிவினர் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.ஏற்கனவே, பல முறைகேடு வழக்குகளில் கைதாகி, தற்போது ஜாமினில் உள்ள சத்யேந்திர ஜெயினுக்கு இந்த விவகாரம் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Indhuindian
மார் 20, 2025 07:00

இந்த ஆப் சமாச்சாரம் ஒரே வூஷலாக இருக்கு தினமும் படிச்சு படிச்சு போரடிக்க ஆரம்பிச்சிடுச்சு அதனலா மொத்தமா தூக்கிட்டு ஒரே செய்தியா போட்ட கொஞ்சம் நிம்மதியா இருக்கும்


Indhuindian
மார் 20, 2025 04:58

என்ன நடக்குது ஏதாவது தப்பு தாண்டா பண்றாங்களானு கண்காணிக்கதான் சீசீடிவி வைக்கறாங்க அந்த சீசீடிவி வைக்கறதுலயே சில நூறு கோடி உஷாலா சபாஷ் சரியான போட்டி உஷால்வாதிக்குஇடையே Long live democracy


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை