உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கி ஊழியர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் தலைமை செயலர்களுக்கு மத்திய அரசு கடிதம்

வங்கி ஊழியர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் தலைமை செயலர்களுக்கு மத்திய அரசு கடிதம்

புதுடில்லி:வங்கி ஊழியர்களின் பாதுகாப்பையும், மக்களுக்கு தடையற்ற வங்கி சேவைகள் கிடைப்பதையும் உறுதி செய்யுமாறு, அனைத்து மாநில தலைமை செயலர்களையும், நிதிச் சேவைகள் செயலர் நாகராஜு கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தலைமைச் செயலர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: சமீபகாலமாக, வங்கி வளாகத்திற்குள், சில சமூக விரோத சக்திகள், வங்கி ஊழியர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொள்வது குறித்த செய்திகளை, சமூக ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. இதில், வாய்மொழியாகவும், சில நேரங்களில் உடல் ரீதியாகவும் தாக்குதல்கள் நடக்கின்றன. இதனால், பொதுமக்கள் அன்றாட நிதித்தேவைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை பெறுவதில் இடையூறுகள் ஏற்படுகின்றன.இதுபோன்ற நடவடிக்கைகள் உறுதியாகவும், உடனடியாகவும், சட்ட நடவடிக்கைகள் வாயிலாக கட்டுப்படுத்தப்பட வேண்டும். வங்கி ஊழியர்களை பாதுகாப்பதும், வங்கி சேவைகளை தடையின்றி பொதுமக்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டியதும் அவசியம். வங்கிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தவிர்க்க, அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாவட்ட காவல் துறையினருக்கு அறிவுறுத்தவும். இதற்கு தேவையான காவல் துறையினரை நியமித்து, பாதுகாப்பு தேவைப்படும் இடங்களில், வங்கியின் உச்ச நேரத்தில் ரோந்து பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். இத்தகைய புகார்களுக்கு, இதற்கென நியமிக்கப்பட்ட சட்ட அமலாக்க பிரிவுகளின் வாயிலாக, குற்றவாளிகளுக்கு எதிராக வலுவான மற்றும் உரிய தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.இத்தகைய நடவடிக்கைகள் பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதுடன், வங்கி ஊழியர்களுக்கு பாதுகாப்பான சூழலையும் வழங்கும். இது, வங்கி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு திறம்பட வழங்க உறுதுணை புரியும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை