காசாவுக்கு உதவிக்கரம் மத்திய அரசு வலியுறுத்தல்
புதுடில்லி, :“காசாவில் வசிக்கும் மக்களுக்கு, மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்” என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான போர், ஓராண்டைக் கடந்தும் நீடித்தது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற நிலையில், தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட வழிவகுத்தார்.போர் நிறுத்தத்திற்கான கெடு நிறைவடைந்ததால், இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் மீண்டும் தாக்குதலை நடத்த துவங்கியுள்ளது. காசாவில் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில், ஒரே நாளில் 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.இந்நிலையில் காசா மீதான தாக்குதல் குறித்து நம் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'காசாவில் தற்போது நிலவும் சூழல், எங்களை கவலைக்கொள்ள செய்துள்ளது. அதேசமயம், ஹமாஸ் பயங்கரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவது அவசியம். இதேபோல், அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரி பலி
காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித்தாக்குதலில், சர்வதேச ஐ.நா., அமைப்பின் திட்டப்பணிக்குழு தலைவர் ஜார்ஜ் மோரேய்ரா டா சில்வா பலியானார். மேலும், ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். காசாவில் உள்ள ஐ.நா., அமைப்பின் அலுவலகத்தை குறிவைத்து, இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் இருப்பிடத்தை குறிவைத்தே வான்வழித்தாக்குதலை அரங்கேற்றி வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.