மத்திய அரசின் சட்ட போராட்டத்துக்கு கிடைத்தது வெற்றி! டில்லி அழைத்து வரப்பட்ட பயங்கரவாதி ராணா
புதுடில்லி: மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி தஹாவூர் ராணா, 64, அமெரிக்காவில் இருந்து நேற்று டில்லிக்கு அழைத்து வரப்பட்டார்.மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 2008, நவ., 26ல், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் -- இ - தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் தாக்குதலில் ஈடுபட்டனர். கடல் மார்க்கமாக மும்பைக்குள் நுழைந்த அவர்கள், மும்பையின் முக்கியப் பகுதிகளில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1mfuaqfn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தொடர்ந்து, 60 மணி நேரம் நடந்த தாக்குதல்களில், 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்களில் ஈடுபட்ட ஒன்பது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 35 ஆண்டுகள்
போலீசாரிடம் சிக்கிய அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டது.இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டு, மூளையாக செயல்பட்ட, பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவில் வசிக்கும் டேவிட் ஹெட்லி, 2009ம் ஆண்டு அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அவருக்கு, 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தானில் பிறந்து, வட அமெரிக்க நாடான கனடா குடியுரிமை பெற்ற தஹாவூர் ராணா, இந்த தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தது தெரியவந்தது.லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ராணா, மும்பை தாக்குதலை நிறைவேற்றுவதற்கு, டேவிட் ஹெட்லி உள்ளிட்டோருக்கு உதவிஉள்ளார். மனு தாக்கல்
இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட ராணா, 2011ல் இருந்து, அங்குள்ள சிறையில் இருந்தார். அவரை நாடு கடத்தி வருவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டது.இதை எதிர்த்து தஹாவூர் ராணா தொடர்ந்த வழக்குகளை, அமெரிக்க நீதிமன்றங்கள் நிராகரித்தன. கடந்த, 2023ல், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிடப்பட்டது. இதை அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம், கடந்தாண்டு உறுதி செய்தது. இந்நிலையில், கடைசி வாய்ப்பாக அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் ராணா சீராய்வு மனுவை தாக்கல் செய்தார்.அந்த மனுவும், சமீபத்தில் நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் 'ரா' எனப்படும் வெளிநாடுகளுக்கான உளவு அமைப்பு அதிகாரிகள், அமெரிக்காவுக்கு சென்றனர்.அவர்களிடம், ராணாவை, அமெரிக்க அரசு நேற்று முன்தினம் ஒப்படைத்தது. தனி விமானத்தில், பலத்த பாதுகாப்புடன் அவர், டில்லிக்கு நேற்று அழைத்து வரப்பட்டார். அவரை டில்லியில் உள்ள திஹார் சிறையில், உயர் பாதுகாப்புள்ள வளாகத்தில் அடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறை வளாகத்திலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.ஏற்கனவே இவர் தொடர்பான வழக்குகளை மும்பையில் இருந்து டில்லிக்கு மாற்றுவதற்கு, நீதிமன்றத்தின் ஒப்புதலை, என்.ஐ.ஏ., பெற்றுள்ளது. ராணா மீது, குற்ற சதி, இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தது, கொலை, மோசடி ஆவணங்கள் தயாரித்தது உட்பட, மிகவும் கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுஉள்ளது. பலத்த பாதுகாப்பு
கடந்த, 2011 டிச.,ல் ராணாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் டேவிட் ஹெட்லி உட்பட, மேலும் ஏழு பேரும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.இந்த வழக்கில் என்.ஐ.ஏ., சார்பில் ஆஜராவதற்காக மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன், சிறப்பு அரசு வழக்கறிஞர் நரேந்திர மான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ராணா அழைத்து வரப்பட்டதை அடுத்து, டில்லி முழுதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பாகிஸ்தான் மழுப்பல்!
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பிறந்தவர் தஹாவூர் ராணா. அங்கு ராணுவ மருத்துவப் பிரிவில் பணியாற்றினார். கடந்த, 1990களில் கனடா சென்று, தொழில் செய்து வந்தார். கனடா குடியுரிமையையும் பெற்றார்.அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டது தொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சவுகத் அலிகான் கூறியுள்ளதாவது:அவர் கனடா குடியுரிமை பெற்றுள்ளார். மேலும், எங்களுடைய ஆவணங்களின்படி, பாகிஸ்தான் குடியுரிமையை, 20 ஆண்டுகளுக்கு மேலாக அவர் புதுப்பிக்கவில்லை. அதனால், இந்த விஷயத்தில் எங்களுக்கும், அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
'கூட்டு முயற்சி'
இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:பல ஆண்டுகள் தொடர்ச்சியாக நடத்திய சட்டப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா, அமெரிக்காவில்இருந்து நம் நாட்டுக்கு வெற்றிகரமாக நாடு கடத்தி அழைத்து வரப்பட்டுள்ளார். இதற்காக நம் நாட்டின் புலனாய்வு அமைப்புகள், அமெரிக்க புலனாய்வு அமைப்புகள், நம் வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள், துாதரக அதிகாரிகள் பெரிதும் உதவினர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.