உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  சபரிமலையில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணி: மத்திய அதிவிரைவுப்படையும் களம் இறங்கியது

 சபரிமலையில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணி: மத்திய அதிவிரைவுப்படையும் களம் இறங்கியது

சபரிமலை: சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகி வரும் நிலையில் அதனை ஒழுங்குபடுத்தும் பணியில் கேரள போலீசுடன் மத்திய அதிவிரைவுப்படை வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சபரிமலையில் ஜன.14- ல் மகரஜோதி விழா நடைபெற உள்ள நிலையில் கடந்த 30 -ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு மகர விளக்கு சீசன் தொடங்கியுள்ளது. அன்று முதல் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். கூட்டம் அதிகமாக உள்ளதால் சிறுவர், சிறுமியுடன் வருபவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். பல இடங்களிலும் நெரிசலில் சிக்கும் இவர்களை போலீசார் மீட்டு தனியாக சன்னிதானம் அருகே கொண்டு செல்கின்றனர். மகரஜோதி நாள் நெருங்கும்போது பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகமாகும் என்பதை கருத்தில் கொண்டு மத்திய அதிவிரைவு படை போலீசாரையும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி நேற்று காலை சன்னிதானம் முன்புறம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை கமாண்டர் பிஜுராம் அறிவுரைகளை வழங்கினார். மத்திய அதிவிரைவு படையில் மொத்தம் 140 போலீசார் உள்ளனர். மர கூட்டம், நடைப்பந்தல், திருமுற்றம், சன்னிதானம், பஸ்மக் குளம், அரவணை கவுன்டர் ஆகிய இடங்களில் இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். டிச., 30, 31ல் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. எனினும் நிலைமை சமாளிக்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர். மலையேறி வரும் பக்தர்களுக்கு உடலில் ஏற்படும் வலி, சுளுக்கு உள்ளிட்டவற்றை சரி செய்வதற்காக இலவச பிசியோ தெரபி மையம் சன்னிதானத்தில் செய்யப்படுகிறது. சபரிமலையில் நடப்பு சீசனில் எக்சைஸ் துறை சார்பில் 224 சோதனை மற்றும் 503 வாகன சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளது. 239 ஓட்டல்கள் ஆய்வு செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தல் தொடர்பாக 895 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 12.4 கிலோ புகையிலை, 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக எக்சைஸ் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ