உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை... மாற்றம்?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை... மாற்றம்?

- நமது சிறப்பு நிருபர் -: சர்வதேச அளவில் பொருளாதார நிச்சயமற்ற சூழல் நிலவும் தற்போதைய நிலையில், மத்திய அரசு பல்வேறு சீர்த்திருந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில், செயல்திறன் மிக்க அமைச்சர்களை நியமிக்கும் வகையில், மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பா.ஜ.,வில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அடுத்த ஆண்டு, ஏழு மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ளதால், மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அதுவும், இன்னும் சில வாரங்களில் மாற்றம் நிகழக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது முறையாக பிரதமரான மோடி, தன் மத்திய அமைச்சரவையுடன், 2024ல் ஜூன் 9ம் தேதி பதவியேற்றார். இதுவரை ஒரு முறைகூட அமைச்சரவை மாற்றம் நிகழவில்லை. ஆனால், இந்த காலக்கட்டத்தில் அமைச்சரவை மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது என கூறப்படுகிறது. இந்த மறுசீரமைப்பில், ரயில்வே, நிதி உட்பட 10 முதல் 12 முக்கிய அமைச்சகங்களில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, தற்போதுள்ள பல அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்படும் எனவும், சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், ஹிமாச்சல பிரதேசம், குஜராத் ஆகிய ஏழு மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு ஏற்ப, மத்திய அமைச்சரவையில் மாற்றம் நிகழக்கூடும் எனவும் கூறப்படுகிறது. நீக்கம் யார்? தற்போதைய மத்திய அமைச்சரவையில் யார் நீக்கப்படுவர்? யார் உள்ளே வருவர்? என்பது இதுவரை யூகங்களாகவே உள்ளன. பிரதமர் மோடியும், அவரது நம்பிக்கைக்குரிய சகாவுமான மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மட்டுமே இதை அறிவர். இந்த அமைச்சரவை மாற்றத்தில், முதல் இலக்காக, ரயில்வே, செய்தி மற்றும் ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் ஆகிய துறைகளை வகிக்கும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இருக்கலாம். இதில், ஒரு துறையை இவர் தக்க வைக்கலாம் அல்லது வேறு துறைக்கு மாற்றப்படலாம் எனவும் நம்பப்படுகிறது. நம் நாட்டில், 'ஜி - 20' மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டியதில் முக்கிய பங்காற்றியவர் முன்னாள் வெளியுறவு செயலராக இருந்த ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா. இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக இருந்த இவர், சமீபத்தில் ராஜ்யசபா எம்.பி.,யாக நியமிக்கப்பட்டார். அடுத்த கட்டமாக, இவர் அமைச்சரவையில் இடம் பெறவும் அதிக வாய்ப்புள்ளது. இதேபோல் நாடு முழுதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய, 'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரம், சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகளில் குளறுபடி போன்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் அளித்து வருகிறது. எனவே, அவரது பதவியும் பறிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. புது முகங்கள் பா.ஜ.,வின் தேசிய தலைவராக மிக இளம் வயதில் நிதின் நபின் பதவியேற்றது அக்கட்சியில் தலைமுறை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது, மத்திய அமைச்சரவையிலும் எதிரொலிக்கிறது. ஏற்கனவே மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஹர்ஷ் மல்ஹோத்ரா, டில்லி பா.ஜ., தலைவராகவும், பங்கஜ் சவுத்ரி, உ.பி., பா.ஜ., தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருவருக்கு ஒரு பதவி என்ற பா.ஜ.,வின் கொள்கைப்படி, அமைச்சர்கள் கட்சி பொறுப்புக்கு செல்லும்போது அவர்கள் தங்களின் பதவியை விட்டுக்கொடுப்பர். இதன்படி, பலர் கட்சி பொறுப்புக்கு செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மத்திய அமைச்சரவையில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்க வழிவகை செய்யப்படும். இதுதவிர, 40 முதல் 50 வயதுக்கு உட்பட்ட இளம் தலைவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் அதிக வாய்ப்பு அளிக்கவும் 70 வயதுக்கு மேற்பட்ட சில மூத்த அமைச்சர்கள் நீக்கப்பட்டு, கட்சி பொறுப்புகளுக்கு அனுப்பப்படலாம் எனவும் அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். இந்தப் பட்டியலில், மூத்த அமைச்சர்களான ராஜ்நாத் சிங், ஹர்தீப்சிங் புரி, கிரிராஜ் சிங் உள்ளிட்டோர் இடம்பெற வாய்ப்புள்ளது. பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, தெலுங்கு தேசம் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்டவை மத்திய அமைச்சரவையில் அதிக பிரதிநிதித்துவம் கோருகின்றன. எனவே, கூட்டணி கட்சியைச் சேர்ந்த சிலரும், கேபினட் அமைச்சர்களாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சரவையில், செயல்திறன் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு, பலவீனமானவர்கள் நீக்கப்படுவர். பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வலுவான அமைச்சரவை உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மறுசீரமைப்பு வெறும் கண்துடைப்பாக இருக்குமா அல்லது ஆட்சியை வலுப்படுத்தி, 2029ல் நடைபெறும் லோக்சபா தேர்தலுக்கு தே.ஜ., கூட்டணியை தயார்படுத்தும் உண்மையான மாற்றமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை