தெருவில் இருந்தே சேவை செய்வேன் முதல்வர் ஆதிஷி ஆவேசம்
புதுடில்லி:“டில்லி முதல்வரின் அதிகாரபூர்வ அரசு பங்களாவை பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு அபகரித்து விட்டது,” என, டில்லி முதல்வர் ஆதிஷி சிங் கூறினார்.ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த நிருபர்கள் சந்திப்பில், முதல்வர் ஆதிஷி சிங் கூறியதாவது:டில்லி முதல்வரின் அதிகாரப்பூர்வ அரசு பங்களாவை பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு அபகரித்து விட்டது. ஆனால், மத்திய அரசு எத்தனை இடைஞ்சல் ஏற்படுத்தினாலும், டில்லி மக்களுக்காக பாடுபடுவேன். அதிகாரப்பூர்வ அரசு பங்களா எனக்கு முக்கியம் கிடையாது. தேவைப்பட்டால் தெருவில் இருந்தே டில்லி மக்களுக்கான சேவையைத் தொடருவேன். தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தவுடன், பெண்களுக்கு மாதந்தோறும் 2,100 ரூபாய் வழங்கப்படும். அதேபோல, முதியவருக்கு தனியார் மருத்துவமனைகளிலும் இலவச மருத்துவம் திட்டம் துவக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.ஆம் ஆத்மி மூத்த தலைரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் சிங் மற்றும் டில்லி அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் ஆகியோரும் உடனிருந்தனர்.