ஐ.எச்.பி.ஏ.எஸ்.,சை மேம்படுத்த நடவடிக்கை ஆய்வுக்கு பின் முதல்வர் ரேகா குப்தா உறுதி
தில்ஷாத் கார்டன்:“ஐ.எச்.பி.ஏ.எஸ்., எனும் மனித நடத்தை மற்றும் கூட்டு அறிவியல் நிறுவனத்தை மாநில அரசு முன்னுரிமை அடிப்படையில் புதுப்பிக்கும்,” என, முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார். கிழக்கு டில்லியின் தில்ஷாத் கார்டனில் உள்ள ஐ.எச்.பி.ஏ.எஸ்., மருத்துவமனையில் நேற்று முதல்வர் ரேகா குப்தா திடீரென ஆய்வு மேற்கொண்டார். அனைத்து பிரிவுகளுக்கும் சென்ற அவர், அங்கு சிகிச்சை பெற வந்திருந்த நோயாளிகளிடம் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்தார். மருத்துவமனை நிர்வாக அதிகாரிகளுடன் முதல்வர் ரேகா குப்தா ஆலோசனை நடத்தினார். அப்போது மருத்துவமனையின் தேவைகள் பற்றி குறிப்பெடுத்துக் கொண்டார். பல்வேறு தேவைகள் இருந்தபோதிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததற்காக மருத்துவக் குழுவினரை அவர் பாராட்டினார். பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஐ.எச்.பி.ஏ.எஸ்.,ஐ முந்தைய அரசாங்கங்கள் கவனித்துக் கொள்ளவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் இந்த மருத்துவமனையை மேம்படுத்த எதுவும் செய்யப்படவில்லை என்பது மிகவும் வருத்தமாக இருந்தது. கடந்த 2012 முதல் இதுவரை, இங்கு ஒரு புதிய எம்.ஆர்.ஐ., அல்லது சி.டி., ஸ்கேன் இயந்திரம் கூட வழங்கப்படவில்லை. இந்த அலட்சியம், பொதுமக்களின் தேவைகளைப் புறக்கணித்த முந்தைய அரசாங்கத்தின் உணர்வின்மைக்கு சான்று. ஐ.எச்.பி.ஏ.எஸ்.,-க்கு தேவையான கட்டமைப்பை நாங்கள் உருவாக்குவோம். இந்த நிதியாண்டிலேயே எம்.ஆர்.ஐ., அல்ட்ரா சவுண்ட், சி.டி., ஸ்கேன் ஆகியவை வாங்கப்படும். முதலில் மருத்துவமனைக்கு ஒரு புதிய புறநோயாளிகள் பிரிவும் அடுத்ததாக புதிய அதிநவீன கட்டடத்தை அரசு கட்டிக் கொடுக்கும். இந்த நிதியாண்டிற்குள், மருத்துவமனைக்கு தேவையான அனைத்து உயர் தொழில்நுட்ப இயந்திரங்கள் மற்றும் நவீன சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்படும். தினமும் 2,500 முதல் 3,000 புறநோயாளிகள் வரும் மருத்துவமனையில் இல்லாத முக்கிய நோயறிதல் உள்கட்டமைப்பை மாநில அரசு ஏற்படுத்தும். டில்லியில் வசிப்பவர்கள் இனி புறக்கணிப்பு அல்லது தாமதங்களை எதிர்கொள்ள மாட்டார்கள். சரியான நேரத்தில், உயர்தர சிகிச்சை மற்றும் நவீன சுகாதார சேவை களைப் பெறுவர். ஒவ்வொரு குடிமகனும் ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதே எங்கள் உறுதி, மேலும் இந்த உறுதியுடன், 'வளர்ந்த டில்லி, வளர்ந்த இந்தியா' என்ற திசையில் நாங்கள் முன்னேறி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.