இன்று முதல் 20 நாட்கள் மெகா துாய்மை இயக்கம் ஆக்கிரமிப்புகள், குப்பை அகற்ற முதல்வர் ரேகா உறுதி
விக்ரம் நகர்:இன்று முதல் அடுத்த 20 நாட்களுக்கு தேசிய தலைநகரில் தொடர் மெகா துாய்மை இயக்கம் நடைபெற உள்ளதாக முதல்வர் ரேகா குப்தா நேற்று அறிவித்தார்.துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா தலைமையில் முதல்வர் ரேகா குப்தா மற்றும் மாவட்ட ஆட்சியர்கள், துணை ஆணையர்கள், டி.சி.பி.,கள், துறைத்தலைவர்கள் பங்கேற்ற உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. நடவடிக்கை
இந்த கூட்டத்தில் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் மேற்கொள்ள வேண்டிய துாய்மை பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.இந்த கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் முதல்வர் ரேகா குப்தா கூறியதாவது:பொதுமக்கள் கண்கூடாக அறியும் வகையில், நகரில் துாய்மையை கொண்டு வர பா.ஜ., அரசு உறுதிபூண்டுள்ளது. இதற்காக அடுத்த 20 நாட்களுக்கு தேசிய தலைநகர் பகுதியில் மெகா துாய்மை இயக்கம் நடைபெறும்.இன்று முதல் நடக்கும் மெகா துாய்மை இயக்கத்தில் குப்பை பிரிக்கும் பணி தீவிரப்படுத்தப்படும். ஆக்கிரமிப்பு அகற்றுதல், நகரெங்கும் கொட்டப்பட்டுள்ள கட்டுமான கழிவுகள் அகற்றுதல் என, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இதற்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுஉள்ளன. தினசரி மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.தவிர நகரின் அனைத்து பகுதிகளிலும் கேமராக்கள் செயலில் இருக்கும்படி சம்பந்தப்பட்ட அனைத்து துறையினரும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அனுமதி இல்லை
துாசி நிறைந்த பகுதிகள் இனி தோட்டங்களாக மாற்றப்படும். தினமும் இரண்டு முறை குப்பை அகற்றப்படும். இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் பொறுப்பாளி ஆக்கப்படுவர்.பொது இடங்களில் குப்பை போடுவதற்கு அனுமதி இல்லை. சுவரொட்டிகள், சித்திரம் வரைவது ஆகியவற்றால் பொது சுவரை சிதைப்பது, கடுமையான தண்டனைக்கு வழிவகுக்கும்.விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கலெக்டர்கள், துணை காவல் அதிகாரிகள் பொறுப்பாளி ஆக்கப்படுவர்.அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள், கல்விக்கூடங்கள், சந்தைகளில் ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.பல ஆண்டுகளின் முட்டுக்கட்டையை உடைத்து, பிரதமர் மோடியின் துாய்மை இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையில் பசுமையான - அழகான - துாய்மையான டில்லியாக மாறும்.இவ்வாறு அவர் கூறினார்.