சதீஷ் ஜார்கிஹோளி வீட்டில் முதல்வர் சித்தராமையா... திடீர் ஆலோசனை! மாநில தலைவர், அமைச்சரவை மாற்றம் குறித்து பேச்சு
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை முதல்வராக இருக்கும் சிவகுமாருக்கு, முதல்வர் பதவி மீது ஆசை. வாய்ப்பு கிடைக்கும்போது டில்லி சென்று மேலிட தலைவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். ஆனால் சித்தராமையாவுக்கும் அவர் ஆதரவு அமைச்சர்களுக்கும், சிவகுமார் முதல்வர் ஆவதில் விருப்பம் இல்லை.சிவகுமாரை கட்டிப்போடும் வகையில், கூடுதல் துணை முதல்வர் பதவிகளை உருவாக்க வேண்டும் என, லோக்சபா தேர்தலுக்கு முன்பு சித்தராமையா ஆதரவு அமைச்சர்களான சதீஷ் ஜார்கிஹோளி, ராஜண்ணா ஆகியோர், கட்சி மேலிடத்திற்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. லோக்சபா தேர்தலில் இங்கு காங்கிரஸ் ஒன்பது இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. பைத்தியம்
மாநில தலைவராக இருக்கும் சிவகுமார் அலட்சியத்தால், குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோற்றதாக சதீஷ் குற்றச்சாட்டு கூறினார். பதிலுக்கு சதீஷை பைத்தியம் என்று சிவகுமார் விமர்சித்தார். அப்போது இருந்து இருவருக்கும் இடையில் உரசல் ஏற்பட்டது.இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, துணை முதல்வர் சிவகுமார் தன் குடும்பத்தினருடன் வெளிநாடு சென்றுள்ளார். இன்று கர்நாடகா வருகிறார். இதற்கிடையில் சித்தராமையா தலைமையில் நேற்று முன்தினம் அமைச்சரவை கூட்டம் நடந்தது.கூட்டம் முடிந்ததும் சதீஷ் ஜார்கிஹோளி வீட்டிற்கு முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா, கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா ஆகியோர் சென்றனர். ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இரவு விருந்து
இந்த கூட்டம் குறித்து கருத்து தெரிவிக்காமல் சித்தராமையா, பரமேஸ்வர் அங்கிருந்து சென்றுவிட்டனர். 'சதீஷ் ஜார்கிஹோளி இரவு விருந்துக்கு அழைத்தார். நாங்கள் வந்தோம்' என கூறிவிட்டு மஹாதேவப்பா, ராஜண்ணா சென்றனர்.'மாநில தலைவர் பதவியில் இருந்து சிவகுமாரை மாற்ற வேண்டும்' என, காங்கிரசில் ஒரு கோஷ்டி கூறுகிறது. தலைவர் பதவி மீது சதீஷ் ஜார்கிஹோளி, ராஜண்ணா, தொழில் அமைச்சர் எம்.பி.பாட்டீல் ஆகியோர் கண் வைத்துள்ளனர்.தலைவர் பதவி, அமைச்சரவையில் மாற்றம் நடத்துவது குறித்து, ஆலோசனை நடந்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. சிவகுமார் வெளிநாட்டில் இருக்கும் சூழ்நிலையில் இந்த கூட்டம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகுமாரை கட்சியில் இருந்து வெளியேற்ற சதி நடப்பதாக, பா.ஜ., தலைவர்கள் கூற ஆரம்பித்துள்ளனர். மேலிட முடிவு
திடீர் ஆலோசனை குறித்து சதீஷ் ஜார்கிஹோளி பெலகாவியில் நேற்று அளித்த பேட்டி:எங்கள் வீட்டுக்கு முதல்வர் வருகை தருவது புதிது இல்லை. பல முறை வந்துள்ளார். நானும் அவரது வீட்டிற்கு சென்று இருக்கிறேன். இரவு விருந்துக்கு வரும்படி முதல்வருக்கும், சில அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுத்தேன்.கட்சியை வலுப்படுத்துவது குறித்தும், வரும் 2028 சட்டசபை தேர்தலில் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவது பற்றியும் ஆலோசித்தோம். மாநில காங்கிரஸ் தலைவர், அமைச்சரவை மாற்றம் குறித்து எதுவும் விவாதிக்கவில்லை.தலைவர்களின் பலம், கட்சியின் நலனுக்காக பல மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்களுக்கு இரண்டு பதவி கொடுக்கப்பட்டு உள்ளது. யாருக்கு எத்தனை பதவி கொடுக்க வேண்டும் என்பதை மேலிடம் தீர்மானிக்கிறது.இப்போது காங்கிரஸ் தலைவராக சிவகுமார் உள்ளார். அவரை மாற்றுவது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். அமைச்சரவை மாற்றம் குறித்து பல தலைவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதுபற்றி கட்சி மேலிடத்திடம் பேசி, முதல்வர் முடிவு செய்வார்.இவ்வாறு அவர் கூறினார்.