முதல்வரின் மைத்துனர் முடா வழக்கில் ஆஜர்
பெங்களூரு: 'முடா' எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தின் மனை வாங்கிய விவகாரத்தில், முதல்வர் சித்தராமையாவின் மைத்துனர் மல்லிகார்ஜுன சாமி, அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்.முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி, 'முடா'வில் சட்டவிரோதமாக 14 மனைகள் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, சமூக ஆர்வலர் சிநேஹமயி கிருஷ்ணா, மைசூரு லோக் ஆயுக்தாவில் புகார் அளித்துள்ளார்.லோக்ஆயுக்தாவும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. ஏற்கனவே முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உட்பட, பலரிடம் விசாரணை நடத்தியது.இதற்கிடையே அமலாக்கத்துறையும், 'முடா' குறித்து விசாரணையை தீவிரப்படுத்தி, பலரிடம் விசாரணை நடத்தியது. முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் அண்ணன் மல்லிகார்ஜுன சாமிக்கும், நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.இதன்படி பெங்களூரின் சாந்திநகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேற்று மதியம் வந்த மல்லிகார்ஜுனசாமி, அதிகாரிகளின் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார்.விசாரணை முடிந்து வெளியே வந்த அவரிடம், ஊடகத்தினர் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் வாயை திறக்காமல், காரில் ஏறிச் சென்றுவிட்டார்.