பலரிடம் ஆன்லைன் மோசடி சீனர்கள் கைவரிசை அம்பலம்
புதுடில்லி:டில்லி மற்றும் நாட்டின் பிற நகரங்களில் நடந்த மோசடிகளின் பின்னணியில், சீனா கும்பல் இருப்பது தெரிய வந்துள்ளது. அதனால், சைபர் கிரைம்களில் ஈடுபடும் சீனர்களை, போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.கடந்த வியாழன் அன்று, தென் மேற்கு டில்லியில், பலரை ஏமாற்றிய கும்பல், கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டு, 15.8 லட்ச ரூபாய் மோசடி தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர். டில்லியை சேர்ந்த சிலரிடம் நடத்திய விசாரணையில், அவர்களை ஏவியது, சில சீனர்கள் என்பது தெரிந்தது.அதுபோல, டில்லியை சேர்ந்த பெண்ணை ஏமாற்றியது தொடர்பாக, பஞ்சாபை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நேபாள நாட்டிற்கு அடிக்கடி சென்று வந்தது தெரிந்தது. அங்கு வந்த சில சீன கும்பல்களிடம், இவர்கள் விலை போனது தெரிந்தது.மேலும், நடந்த முறைகேடுகள் எல்லாமும், ஒரே மாதிரி ஏமாற்றப்பட்டதாகவே இருந்தது. குறிப்பாக, கிரிப்டோகரன்சி, ஆன்லைன் மோசடி, வங்கிக்கணக்கில் அதிக பணத்தை காட்டி ஏமாற்றுவது என ஒரே மாதிரி குற்றங்களாக இருந்ததால், அவற்றின் பின்னணியில் சீன கும்பல் இருக்கலாம் என டில்லி போலீசார் சந்தேகிக்கின்றனர்.எனவே, சீன நாட்டைச் சேர்ந்த சிலரை சுற்றி வளைத்துள்ள போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.