உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  பீஹாரில் உருவான இளம் தலைவர்: விஸ்வரூபம் எடுத்த சிராக் பஸ்வான்

 பீஹாரில் உருவான இளம் தலைவர்: விஸ்வரூபம் எடுத்த சிராக் பஸ்வான்

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில், 28 இடங்களில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி 19 இடங்களில் வெற்றி பெற்று, அம்மாநிலத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருவாகியுள்ளது. பீஹார் மாநிலத்தின் முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், 2000ம் ஆண்டு லோக் ஜன்சக்தி கட்சியை துவங்கினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0i8m9i48&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தலைமை பொறுப்பு கடந்த 2020ல் நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பே அவர் காலமானார். இதைத் தொடர்ந்து, அக்கட்சி உட்பூசலில் சிக்கி தவித்தது. அப்போது, எம்.பி.,யாக இருந்த ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான், கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றார். இதற்கிடையே, 2020ல் நடந்த சட்டசபை தேர்தலில் சிராக் பஸ்வான் தனித்து களமிறங்கி, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அந்த தேர்தலில், 130 தொகுதிகளில் போட்டியிட்ட சிராக் பஸ்வான் கட்சி, ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. ஆனால், பல இடங்களில் ஐக்கிய ஜனதா தளத்தின் வெற்றியை அக்கட்சி தடுத்தது. இதையடுத்து, நிதிஷ் - சிராக் இடையிலான மோதல் தீவிரம் அடைந்தது. 'பீஹார் அரசியலில் மகத்தானவராக கருதப்படும் ராம் விலாஸ் பஸ்வானின் பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்லும் ஆற்றல் சிராக் பஸ்வானிடம் இல்லை' என விமர்சனம் எழுந்தது. பலரும் அவரது தலைமைக்கு எதிராக குரல் எழுப்பினர். இதையடுத்து, அக்கட்சி இரண்டாக பிளவுபட்டது. சிராக் தலைமையில் லோக் ஜன்சக்தி கட்சி - ராம் விலாஸ் எனவும், ராம் வி லாசின் சகோதரர் பசுபதி குமார் தலைமையில் ராஷ்ட்ரீய லோக் சமதா எனவும் இரு கட்சிகள் உருவாகின. கட்சி பிளவுக்கு நிதிஷ் தான் காரணம் என்ற பலமான குற்றச்சாட்டை சிராக் முன்வைத்தார். அதேசமயம், அவருடன் இணைந்து பா.ஜ.,வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் பயணித்தார். கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், ஐந்து இடங்களில் போட்டியிட்ட சிராக் கட்சி, அனைத்து இடங்களிலும் அமோக வெற்றி பெற்று, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. இதையடுத்து, மீண்டும் மத்திய அமைச்சரானார் சிராக் பஸ்வான்.

செல்வாக்கு

தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் துவக்கத்தில் இருந்தே இழுபறி நீடித்தது. அப்போது, தங்கள் கட்சிக்கு குறைந்தது, 28 தொகுதிகளாவது வேண்டும் என பிடிவாதமாக கேட்டு வாங்கினார் சிராக். தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், போட்டியிட்ட தொகுதிகளில், 19 இடங்களில், சிராக்கின் லோக் ஜன்சக்தி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, பீஹாரின் தலித் மக்கள் மத்தியில் தந்தை ராம் விலாஸ் பஸ்வான் போல் தவிர்க்க முடியாத செல்வாக்கு மிக்க இளம் தலைவராக சிராக் பஸ்வான் உருவெடுத்துள்ளார். நான்காவது முறை சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றி வாயிலாக, விஸ்வரூப வெற்றியையும் அவர் ருசித்துள்ளார். தேர்தலுக்கு முன் தனியார் டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், 'எதிர்காலம் எப்படி இருக்கும் என யாருக்கும் தெரியாது. எங்கள் விருப்பம் எல்லாம், நான்காவது முறையாக, மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதுதான். அடுத்த லோக்சபா தேர்தலை நோக்கிதான் எங்கள் பயணம் இருக்கும்' என, தெரிவித்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

RAMESH KUMAR R V
நவ 15, 2025 11:57

வருங்கால பீகார் இளம் முதலமைச்சர். மக்கள் மத்தியில் பிரபலம்.


Sun
நவ 15, 2025 09:15

இவர்தான் உண்மையான தலைவர். 2020ல் நிதீஷை கடுமையாக விமர்சனம் செய்து தனியாக நின்று நிதீஷ் கட்சியின் வெற்றியை பல இடங்களில் தடுத்ததால் இன்று பீகாரில் பா.ஜ.க மற்றும் நிதீஷால் தவிர்க்க முடியாத சக்தியாக மாறி உள்ளார். இங்கும் சில பேர் உள்ளனர்! ஒரு சில சீட்டுகளுக்காக தன் சமுதாய ஓட்டுகளை அடுத்தவர்களுக்கு அடகு வைத்து அவர்கள் அருகில் பிளாஸ்டிக் சேர் கொடுத்து அமரச் சொன்னாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கின்றனர். தனது எஜமான விசுவாசத்தால் பிற எதிர் கட்சிகளை தனது எஜமானர்களுக்கு பதிலாக தானே விமர்சனம் செய்யும் அடியாள் வேலையையும் சேர்த்து வேற பார்க்கின்றனர்.


முக்கிய வீடியோ