காங்.,- - எம்.எல்.ஏ.,வை பாராட்டிய சிரஞ்சீவி
கர்நாடக சட்டசபைக்கு கடந்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடந்தது. காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்று, தனி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. இதில் 30க்கும் மேற்பட்டோர் புதுமுக எம்.எல்.ஏ.,க்கள்.இவர்களில் சிலர், சட்டசபை கூட்டத்தொடரில் பேசும்போது அதிக கவனத்தை ஈர்க்கின்றனர். அதில் ஒருவர், சிக்பல்லாபூர் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர். சட்டசபை தேர்தலில் பா.ஜ., முன்னாள் அமைச்சர் சுதாகரை 10,642 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர். வசீகர பேச்சு
தேர்தல் பிரசாரத்தின் போது தனது வசீகரமான பேச்சால் மக்களை கவர்ந்து இழுத்தார். முதல்வர் சித்தராமையாவின் செல்ல பிள்ளையாகவும் வலம் வருகிறார்.எம்.எல்.ஏ., ஆன பின்பு தொகுதி முழுதும் வலம் வந்து, மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 'பரிஸ்ரமா' என்ற பெயரில் நீட் பயிற்சி மையத்தையும் நடத்துகிறார். ஏழை மாணவர்களுக்கு, தனது பயிற்சி மையம் மூலம் இலவசமாக பயிற்சி அளிக்கிறார். மாநிலத்தில் யாருக்காவது உதவி தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்தார்.வீடு தேடி செல்லும் சுகாதார திட்டத்தை செயல்படுத்தினார். முதியவர்களிடம் தரையில் அமர்ந்து குறைகளை கேட்கிறார். இதனால் சிக்கபல்லாபூர் தொகுதி மக்களிடம் நன்மதிப்பு பெற்றுள்ளார்.பிரதீப் ஈஸ்வரின் செயல்பாடுகள், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியை வெகுவாக கவர்ந்துள்ளது. 'பிரதீப் ஈஸ்வர் நன்றாக வேலை செய்கிறார். அவரைப் போன்றவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்' என்று வெகுவாக பாராட்டி உள்ளார். சிரஞ்சீவி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. தீவிர ரசிகர்
பிரதீப் ஈஸ்வரும், சிரஞ்சீவியின் தீவிர ரசிகர் ஆவார். சிக்கபல்லாபூர் ஆந்திராவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. சிரஞ்சீவியின் திரைப்படங்களை ஆந்திராவுக்கு சென்று பார்த்துள்ளேன் என, பிரதீப் ஈஸ்வரும் ஏற்கனவே கூறியுள்ளார்.லோக்சபா தேர்தலின் போது பா.ஜ., சுதாகருக்கு ஆதரவாக சிரஞ்சீவி பிரசாரம் செய்ய வருவார் என்று கூறப்பட்டது. ஆனால், சிரஞ்சீவி ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட மாட்டார் என பிரதீப் ஈஸ்வர் அடித்து கூறினார். அவர் கூறியபடி, சிரஞ்சீவி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.- நமது நிருபர் --