சஹாரா பாலைவனத்தை டூ-வீலரில் கடந்து சாம்பியன் பட்டம் பெற்ற சி.கே.சின்னப்பா
கடினமான சஹாரா பாலைவனத்தில் நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்று, 100 சிசி கைனடிக் ஹோண்டா இரு சக்கர வாகனத்தில் பயணித்து, கர்நாடகாவை சேர்ந்த சந்திரகுமார் சின்னப்பா சாதனை படைத்துள்ளார்.பெங்களூரை சேர்ந்தவர் சந்திரகுமார் சின்னப்பா, 71. இவர், 1953 மே 16ல் பிறந்தார். சிறு வயது முதலே இவருக்கு இருசக்கர வாகனம் என்றால் மிகவும் பிடிக்கும். தனது இளமை காலத்தில், 1973ல் பெங்களூரு மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் இரு சக்கர வாகனங்களுக்காக நடத்தப்பட்ட 'கர்நாடகா 1000' போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற்றார். அன்று துவங்கிய இவரின் வெற்றி பயணம் பல சாதனைகளை படைக்கும் அளவுக்கு முன்னேறியது.'கர்நாடகா 1000' என்பது இரு மாநிலங்களுக்கு இடையே இருசக்கர வாகனத்திலும், காரிலும் பயணிக்கும் போட்டியாகும். 1980களில் நான்கு சக்கர கார்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்க துவங்கினார். 1991ல் சஹாரா பாலைவனத்தை கடக்கும் போட்டியில், 100 சிசி கைனடிக் ஹோண்டா இரு சக்கர வாகனத்தில் பயணித்தார்.பின், 2000வது ஆண்டில் ஹிமாலயாவில் நடந்த போட்டியிலும்; 2003ல் நாசிக்கில் நடந்த போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெற்றார். 2007ல் பாலைவனம் கடக்கும் போட்டியில், சக வீரர் அனில் வாடியாவுடன் இணைந்து வெற்றி பெற்றார். தொடர்ந்து 34 ஆண்டுகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்த சின்னப்பா, ஓய்வு பெற்றார்.இந்திய தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று சாதனைகள் படைத்துள்ளார். இது தவிர, ஹிமாலயன் போட்டி, பாலைவன போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.தற்போது, இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளராக சின்னப்பா உள்ளார். - நமது நிருபர் -