UPDATED : செப் 28, 2024 02:17 PM | ADDED : செப் 28, 2024 11:46 AM
கொச்சி: ‛‛ஊழல்வாதிகளை முதல்வர் பினராயி விஜயன் காப்பாற்றுகிறார்'' என்று குற்றம்சாட்டி இடதுசாரி கூட்டணியில் இருந்து எம்எல்ஏ அன்வர் விலகியது, கேரள கம்யூனிஸ்டுகளுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.அன்வர் ஒரு தொழில் அதிபர். நிலம்பூர் தொகுதியில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர். அவரை மார்க்சிஸ்ட் கட்சி ஆதரித்தது. இவர்களுக்கு இடையேயான தேனிலவு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.‛‛பினராயி விஜயனின் அரசியல் பி.ஏ., சசி மற்றும் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அஜித்குமார் ஆகியோர் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். கரிப்பூர் விமான நிலையத்தில் கடத்தல் தங்கத்தை பிடித்து, அதில் ஒரு பகுதியை சுருட்டி விட்டனர்'' என்று கடந்த மாதம் அன்வர் குற்றம்சாட்டினார்.இதற்கு ஆதாரமாக தனக்கும் எஸ்.பி., சுஜித் தாஸ் என்பவருக்கும் இடையே நடந்த உரையாடல் ஆடியோவை வெளியிட்டார். இதையடுத்து அந்த எஸ்பியை கேரள அரசு சஸ்பெண்ட் செய்தது. இதனால் மேலும் கடுப்பான அன்வர், ஏடிஜிபி அஜித்குமார் மீது அடுக்கடுக்கான புகார்களை வைத்தார். ‛‛தங்கம் கடத்தல் கும்பலுடன் அஜித்குமாருக்கு தொடர்பு உள்ளது. எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் போன் உரையாடல்களை ஏடிஜிபி டேப் செய்கிறார்'' என்றெல்லாம் குற்றம் சுமத்தினார். பினராயியின் பி.ஏ., சசிக்கு கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வலுவான செல்வாக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இவர் 2011ல் ஒரு கம்யூனிஸ்ட் பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 2022ல் மீண்டும் கட்சிக்குள் சேர்க்கப்பட்ட சசி, முதல்வரின் பி.ஏ.,வாக நியமிக்கப்பட்டார்.அன்வர் எவ்வளவு தான் கத்தினாலும் அதை பினராயி கண்டுகொள்ளவில்லை. அன்வரின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். ‛‛இடதுசாரி கட்சிகளுக்கு எதிரானவர்களின் ஊதுகுழலாக அன்வர் செயல்படுகிறார். மார்க்சிஸ்ட் கட்சியை அசிங்கப்படுத்துவது தான் அன்வரின் வேலை'' என்று வழக்கமான குற்றச்சாட்டை கூறினார் பினராயி.இதன் பிறகு தான் இடதுசாரி கூட்டணியில் இருந்து வெளியேறிய அன்வர், எம்எல்ஏ-வாக மட்டும் தொடர்வாக அறிவித்தார். சுமார் 2 மணி நேரம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பினராயி மீது சரமாரியான புகார்களை கூறினார் அன்வர். மீதி தங்கம் எங்கே ?
சமீபத்தில் இன்னொரு வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டார் அன்வர். அதில் பேசிய தங்க கடத்தல்காரர்கள், ‛‛நாங்கள் இருமுறை 900 கிராம் தங்கத்தை கடத்தினோம். அதைப் பிடித்த போலீசார் முதலில் 540 கிராம் தங்கத்தை கைப்பற்றியதாக கூறினர். 2வது முறை 320 கிராம் மட்டுமே பிடித்ததாக கூறினர். அப்படியானால் மீதி தங்கம் எங்கே'' என்று கூறியிருந்தனர்.‛‛முதல்வருக்கு நெருக்கமானவர்களுக்கு தங்கம் கடத்தலில் தொடர்பு இருக்கிறது. இதற்கு ஒரு விசாரணை கமிஷன் வைக்க வேண்டும்'' என்கிறார் அன்வர்.இதுவரை கேரளாவில் பெரிய அளவில் எதிர்ப்பை எதிர்கொள்ளாத பினராயிக்கு அன்வர் உருவத்தில் புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இதனால் அவப்பெயர் வந்துள்ளது