| ADDED : ஜன 26, 2025 07:20 AM
நீண்ட நாட்களாக பள்ளிக்கூடத்துக்கு புதிய கட்டடம் இல்லாததால், கோவில் கட்டுவதற்காக வசூலிக்கப்பட்ட பணத்தில், அனைத்து வசதியுடன் கூடிய மூன்று வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.கொப்பால் மாவட்டம், குஷ்டகியின் புட்டவாங்கேரி கிராமம் உள்ளது. இங்கு ஒன்று முதல் எட்டாம் வகுப்புக்கான தரம் உயர்த்தப்பட்ட முதுநிலை அரசுப் பள்ளி உள்ளது. ஆனால், மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் போதிய வகுப்பறைகள் இல்லை.பல ஆண்டுகளாக, மாணவர்களுக்கு பள்ளி அறைகள் கட்டித்தரும்படி சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளிடம் கிராம மக்கள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், கிராமத்தில் உள்ள சிவனம்மா தேவி கோவில் அறக்கட்டளையினர், கிராமத்தின் குழந்தைகள் படும் அவஸ்தியை உணர்ந்தனர். கிராம மக்களுடன் இதுதொடர்பாக அறக்கட்டளையினர் விவாதித்தனர்.மாணவர்களுக்காக வகுப்பறை கட்ட கிராம மக்கள் முடிவு செய்தனர். சிவனம்மா தேவி கோவிலில் பல ஆண்டுகளாக வசூலிக்கப்பட்ட 20 லட்சம் ரூபாயை, பள்ளி வகுப்பறை கட்டுவது என முடிவு செய்யப்பட்டது. இப்பணத்தில் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மற்றும் ஆங்கில வழியில் முதல் வகுப்புக்கான வகுப்பறை கட்ட தீர்மானித்தனர்.இதற்கான இடம் தனியாரிடம் கேட்டபோது, அதிக தொகை கேட்டனர். இதனால் கிராமத்தில் இருந்து சிறிது தொலைவில், அரசுக்கு சொந்தமான மாட்டு தொழுவத்தில், வகுப்பறை கட்ட முடிவு செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். அவர்களும் அரசிடம் அனுமதி பெற்று, வகுப்பறைகள் கட்ட சம்மதம் தெரிவித்தனர்.தற்போது, அனைத்து வசதியுடன் கூடிய மூன்று வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டடத்தை திறக்க, அரசின் அனுமதிக்காக கிராம மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.கிராமத்தினர் கூறுகையில், 'குழந்தைகளின் கல்வி எதிர்காலத்தை விட, பெரியது எதுவுமில்லை. ஊர் மக்கள் தாராளமாக பள்ளி அறைகள் கட்ட ஊக்கம் அளித்தனர். அறைகள் கட்டும் செலவுகள் அனைத்தும் நாங்களே ஏற்றுக் கொண்டோம். வெளியாட்களிடம் இருந்து ஒரு பைசா கூட நன்கொடை பெறவில்லை' என்றனர்.கல்வி வளர்ச்சிக்காக கிராம மக்கள், அரசுடன் கைகோர்த்துள்ளனர். இந்த ஊருக்கு உயர்நிலைப் பள்ளியை அனுமதிக்கும் திட்டத்துக்கு அரசிடம் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.சுரேந்திர காம்பளே,தொகுதி கல்வி அதிகாரி - நமது நிருபர் -