உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  எம்.எல்.சி., பதவி முதல்வர் நிதிஷ் ராஜினாமா

 எம்.எல்.சி., பதவி முதல்வர் நிதிஷ் ராஜினாமா

பாட்னா: ராஜ்யசபாவுக்கு தேர்வானதை அடுத்து, பீஹாரில் நீண்ட காலமாக வகித்து வந்த எம்.எல்.சி., எனப்படும் சட்ட மேல்சபை உறுப்பினர் பதவியை, அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் நேற்று ராஜினாமா செய்தார். பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில், இந்த கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. பா.ஜ., அதிக இடங்களை கைப்பற்றி இருந்தாலும், முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் பதவியேற்றார். எதிர்பாராத திருப்பமாக, பீஹாரில், சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேசிய அரசியலில் கவனம் செலுத்தவே அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, ஒருவர் ஒரு பதவியில் மட்டுமே இருக்க முடியும். இந்நிலையில் நேற்று, சட்ட மேல்சபை உறுப்பினர் பதவியை முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை சட்ட மேல்சபை தலைவர் அவதேஷ் நாராயண் சிங்கிடம் அவர் வழங்கினார். பீஹாரில், ஐக்கிய ஜனதா தளத்தை ஓரங்கட்டிவிட்டு, பா.ஜ., ஆட்சி அமைக்க முயல்வதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்திருந்தனர். நீண்ட ஆண்டுகளாக பீஹார் அரசியலில் கோலோச்சிய நிதிஷ் குமார், இனி டில்லியை மையமாக கொண்ட தேசிய அரசியலில் தீவிரமாக இயங்கவுள்ளார். பா.ஜ., தலைமையில், பீஹாரில் புதிய அரசு விரைவில் பதவியேற்கும் என, கூறப்படுகிறது. எனவே, அம்மாநிலத்தை ஆளப்போகும் முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. நிதின் நபினும் ராஜினாமா! பா.ஜ., தேசிய தலைவராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதின் நபின், ராஜ்யசபா எம்.பி.,யானதால், பீஹார் எம்.எல்.ஏ., பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை பா.ஜ., மாநில தலைவர் சஞ்ஜய் சரோஜி மூலம், சபாநாயகர் பிரேம் குமாரிடம் அவர் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை