சுத்தமான நீரில் நின்றவாறு சத் பூஜை டில்லி பெண்களுக்கு முதல்வர் ரேகா குப்தா அழைப்பு
புதுடில்லி:''இந்த ஆண்டு சத் பூஜையை, யமுனை நதியில் பெண்கள் நல்ல முறையில் கொண்டாடலாம். முந்தைய ஆட்சியில் இருந்த அழுக்கு, நுரை போன்றவற்றை இந்த ஆண்டு, யமுனை ஆற்றில் காண முடியாது. தொடர்ந்து இப்படியே இருக்க வேண்டும் என பெண்கள் வேண்டிக் கொள்ள வேண்டும்,'' என, டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார். டில்லியில் நிரந்தரமாக குடியேறிய, உத்தர பிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் சத் பூஜையை, யமுனை நதியில் கொண்டாடுவது வழக்கம். தீபாவளி பண்டிகை முடிந்து, ஆறு நாட்கள் கழித்து, இதற்காக மூன்று நாட்கள் விரதம் இருக்கும் பெண்கள், கங்கை நதியில் பசுவின் பாலை விட்டு, 'அர்கியா' என்ற பெயரில், சூரிய கடவுளுக்கு பூஜை செய்வது வழக்கம். சூரிய கடவுள் கணவர் மற்றும் குழந்தைகள் நல்ல முறையில், உடல் நலத்துடன் விளங்க வேண்டும் என்பதற்காக, சூரிய கடவுளுக்காக இந்த பூஜை செய்யப்படுகிறது. வழக்கமாக, யமுனை நதியில் நிறைந்திருக்கும் கழிவுகள், அழுக்குகள் நிறைந்த நுரைகளுடன் வரும் நீரில் நின்றவாறு பெண்கள், சூரிய கடவுளுக்கு பூஜைகள் செய்வர். ஆனால், இந்த ஆண்டு, சத் பூஜைக்காக, காலிந்தி கஞ்ச் காட் எனும் படித்துறையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த ஏற்பாடுகளை பார்வையிட்ட, பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் ரேகா குப்தா, பின் நிருபர்களிடம் கூறியதாவது: முந்தைய ஆண்டுகள் போல இன்றி, இந்த ஆண்டு பெண்கள், யமுனை நதியில் சுத்தமான நீரில் நின்றவாறு அர்க்யா பூஜையை மேற்கொள்ளலாம். அந்த அளவுக்கு, இந்த நதிக்கரையும், நதியும் சுத்தப் படுத்தப்பட்டுள்ளது. ரசாயன கலப்பு இதனால், வழக்கமான அழுக்கு, நுரைகள் நிரம்பிய தண்ணீரை தவிர்த்து, நல்ல நீரில் நின்றவாறு பெண்கள் வழிபடலாம். அதுபோல, தொடர்ந்து இதுபோல, யமுனை நதியில் நல்ல தண்ணீர் வர, சூரிய கடவுளை வழிபட வேண்டும். முழுவதும், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில், இந்த நதி சுத்தப்படுகிறது. ரசாயன கலப்பு எதுவும் இல்லாமல், தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. ரசாயன கழிவுகள், அகற்றப்பட்டுள்ளன. இந்த பணியில், நுாற்றுக்கணக்கான மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . இவ்வாறு முதல்வர் ரேகா குப்தா கூறினார். ஆனால், சமூக வலைதளங்களில், முந்தைய ஆண்டின் படங்களையே இந்த ஆண்டும் பிரசுரித்து, 'இந்த ஆண்டும் சத் பூஜையை பெண்கள் இப்படித் தான் கொண்டாட உள்ளனரோ...' என்ற ரீதியில் எழுதப்பட்டிருந்தது. அந்த வீடியோவை நம்ப வேண்டாம் என முதல்வர் ரேகா குப்தா கேட்டுக் கொண்டுள்ளார்.