தவறான விளம்பரம் வெளியிட்ட கோச்சிங் சென்டருக்கு ரூ.5 லட்சம் அபராதம்
யு.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள் தொடர்பாக தவறான விளம்பரம் வெளியிட்ட புகாரில், டில்லியில் செயல்படும் பிரபல தனியார் கோச்சிங் சென்டரான திருஷ்டி ஐ.ஏ.எஸ்., நிறுவனத்துக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. விளம்பரம் தமிழகம், டில்லி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உட்பட நாடு முழுதும் இந்த போட்டித் தேர்வுகளுக்கென்று, தனியார் கோச்சிங் சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன. டில்லியில் செயல்படும் பிரபல தனியார் கோச்சிங் சென்டரான திருஷ்டி ஐ.ஏ.எஸ்., பயிற்சி நிறுவனம், 2022ல் நடந்த யு.பி.எஸ்.சி., தேர்வில், தங்கள் மையத்தில் படித்த 216 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகக் கூறி, அவர்களது பெயர் மற்றும் புகைப் படங்களை விளம்பரமாக வெளியிட்டது. இது குறித்து விசாரணை நடத்திய மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: விசாரணையில், திருஷ்டி ஐ.ஏ.எஸ்., பயிற்சி நிறுவனத்தின் விளம்பரம் முற்றிலும் தவறானது என்பது தெரிய வந்தது. அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ள 216 பேரில், 162 பேர், யு.பி.எஸ்.சி., தேர்வுகளை தாங்களாகவே முடித்து, அந்நிறுவனத்தின் இலவச நேர்காணல் வழி காட்டுதல் திட்டத்தில் மட்டுமே பங்கேற்றதும், 54 மாணவர்கள் மட்டுமே அங்கு பயிற்சி பெற்றதும் தெரிய வந்தது. முக்கிய தகவல்களை வேண்டுமென்றே மறைத்து, யு.பி.எஸ்.சி., தேர்வின் வெற்றிக்கு நிறுவனமே காரணம் என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் நம்பும்படி, திருஷ்டி ஐ.ஏ.எஸ்., பயிற்சி நிறுவனம் திசை திருப்பியுள்ளது. இது, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் - 2019- பிரிவு 2(28)-ன் கீழ் தவறான விளம்பரமாக கருதப்படுகிறது. எனவே, திருஷ்டி ஐ.ஏ.எஸ்., நிறுவனத்துக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது முறை இது போன்ற தவறான விளம்பரத்துக்காக திருஷ்டி ஐ.ஏ.எஸ்., பயிற்சி நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படுவது இது இரண்டாவது முறை. முன்னதாக, 2021- யு.பி.எஸ்.சி., தேர்வில், 150 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அந்நிறு வனம் விளம்பரம் வெளியிட்டது. விசாரணையில், அது தவறு என தெரிய வந்ததை அடுத்து, 2024 செப்டம்பரில் அந்நிறுவனத்துக்கு 3 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. - நமது சிறப்பு நிருபர் -