பிப்ரவரியில் டில்லி சட்டசபை தேர்தல் கட்சிகளுடன் ஆணையம் ஆலோசனை
புதுடில்லி:டில்லி சட்டசபைத் தேர்தல் குறித்து, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.டில்லி அரசின் பதவிக் காலம் வரும் பிப்ரவரி 23ம் தேதி நிறைவடைகிறது. எனவே, அதற்கு முன்னதாக டில்லி சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் அதற்குரிய பணிகளைத் துவக்குவதற்கு முன்பே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை துவக்கி விட்டன.தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி, மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டது. ஆட்சியை கைப்பற்றத் துடிக்கும் பா.ஜ.,வும் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.இந்நிலையில், சட்டசபை தேர்தல் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் நேற்று ஆலோசனை நடத்தியது. புதுடில்லி லோக்சபா தொகுதி பா.ஜ., - எம்.பி., பான்சூரி ஸ்வராஜ், ஆம் ஆத்மி கட்சி ராஜ்யசபா எம்.பி., ராகவ் சத்தா, செய்தித் தொடர்பாளர் ஜாஸ்மின் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரை மணி நேரம் மட்டுமே நடந்த இந்தக் கூட்டத்தில், பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. சமூக வலைதளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பதிவு:தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார் மற்றும் டாக்டர் சந்து ஆகியோர், டில்லி சட்டசபை தேர்தல் ஏற்பாடு குறித்து ஆலோசித்து வருகின்றனர். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முதற்கட்டமாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் டில்லி சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில், ஓட்டு இயந்திரங்களின் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மொத்தம் 70 எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட டில்லி சட்டசபையின் பதவிக் காலம் வரும் பிப்ரவரி 23-ம் தேதி நிறைவு பெறுகிறது. எனவே, அதற்கு முன்னதாக பிப்ரவரி இரண்டாவது வாரத்துக்குள் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.