உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆப்கன் அமைச்சர் இந்தியா வருகை கொடி வைப்பதில் நீடிக்கிறது குழப்பம்

ஆப்கன் அமைச்சர் இந்தியா வருகை கொடி வைப்பதில் நீடிக்கிறது குழப்பம்

புதுடில்லி:ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசை சேர்ந்த வெளியுறவு அமைச்சர், ஒருவார பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், அந்த நாட்டின் தேசிய கொடியை வைப்பதில் அதிகாரிகளுக்கு குழப்பம் எழுந்துள்ளது. சுமுகமான உறவு நம் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில், 2021ல் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அதனால், ஆப்கனில் இருந்த இந்திய துாதரகம் மூடப்பட்டது. இங்கு இருந்த துாதரகமும் முடங்கியது. அதற்கு முன்பு வரை, இந்தியா - ஆப்கன் இடையே சுமுகமான உறவு நீடித்தது. இருப்பினும் தலிபான் பொறுப்புக்கு வந்த ஓராண்டுக்கு பின், வர்த்தகம், மருத்துவ உதவி மற்றும் மனிதாபிமான பணிகளுக்காக, ஆப்கனில் சிறிய அளவிலான துாதரகம் திறக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு இதுவரை தலிபான் அரசை அங்கீகரிக்கவில்லை. அதே சமயம் இருதரப்பு பேச்சு மூலம் உறவை மேம்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முஹ்தாகி, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உடன், மே 15ல் தொலைபேசியில் பேசினார். அனுமதி அப்போது, பஹல்காமில் நடந்த பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலை முஹ்தாகி கண்டித்தார். இந்நிலையில், அவர் ஒருவார பயணமாக டில்லிக்கு நேற்று வந்தார். முன்னதாக அவருக்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்திருந்தது. இந்த பயணத்திற்காக அவர் மீதான தடை தற்காலிகமாக நீக்கப்பட்டு, பயண அனுமதி வழங்கப்பட்டது. வழக்கமாக வெளிநாட்டு அமைச்சர்கள், பிரதிநிதிகள் நம் நாட்டு அமைச்சர்கள், அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தும்போது இரு நாட்டு கொடிகளும் பின்னணியில் இருக்கும். ஆப்கன் தலிபான் அரசின் கொடி வெள்ளை நிறத்தில் இருக்கும். அதில், அரபி வாசகம் இடம் பெற்றிருக்கும். தலிபான் அரசையும், அதன் கொடியையும் மத்திய அரசு அங்கீகரிக்காததால், என்ன செய்வது என அதிகாரிகள் குழம்பி உள்ளனர். ஆப்கன் அமைச்சர் முஹ்தாகி இந்த பயணத்தின் போது, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்திப்பார் என எதிர் பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை