உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., அலுவலக நில ஆவணங்கள் தங்கவயல் ரூபகலாவிடம் ஒப்படைப்பு

காங்., அலுவலக நில ஆவணங்கள் தங்கவயல் ரூபகலாவிடம் ஒப்படைப்பு

தங்கவயல்: தங்கவயல் காங்கிரஸ் அலுவலகத்துக்காக, 50 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நிலத்தின் ஆவணங்களை வைத்திருந்த முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் எம்.சம்பத்குமார், தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலாவிடம் அவற்றை ஒப்படைத்தார்.தங்கவயலில் காங்கிரஸ் கட்சிக்காக அலுவலகம் இல்லாததால் நிர்வாகிகள் வீடு, கடைகள், நடைபாதைகளில் கட்சி நடத்தி வந்தனர். பழம் பெரும் காங்கிரஸ் தலைவர்கள், கட்சி அலுவலகத்தை பார்க்காமலேயே காலமாகி விட்டனர்.கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் பி.வி.வெங்கடேஷ் என்பவர், நகர காங்கிரஸ் தலைவராக இருந்த போது, ராபர்ட்சன்பேட்டை பி.எம்., சாலையில் அரசு மருத்துவமனைக்கு அருகே காங்கிரஸ் அலுவலகத்திற்காக நிலம் வாங்கினார். இந்நிலம், தலைவராக இருந்த அவர் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் சொத்து

இந்த விபரங்களை அறிந்த, அப்போதைய நகராட்சி உறுப்பினரான காங்கிரஸ் தலைவர் சம்பத்குமார், நகராட்சி தலைவராக இருந்த தாஸ் சின்னசவரியிடம் தெரிவித்தார். இந்த நிலம் 'தங்கவயல் நகர காங்கிரஸ் சொத்து' என பதிவு செய்யப்பட்டது.மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த ஜனார்த்தன பூஜாரி, தங்கவயலுக்கு வந்திருந்த போது, காங்கிரஸ் அலுவலகத்திற்கு அப்போதைய கோலார் தொகுதி காங்கிரஸ் எம்.பி., முனியப்பா தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டது. கடந்த 2004 சட்டசபைத் தேர்தலில், தங்கவயலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட சம்பத்குமார், இதனை ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். ஆனால் பயன் தரவில்லை. அடிக்கல் நாட்டப்பட்ட கல்வெட்டு, சிதறு தேங்காய் போல உடைத்து, இருக்கும் இடம் தெரியாமல் போனது. இதை தொடர்ந்து தங்கவயல் நகரின் இதய பகுதியில், காங்கிரசுக்காக வாங்கப்பட்ட நில ஆவணங்கள், முதல்வரின் அரசியல் செயலர் நசீர் அகமதுவிடம் இருப்பதாக கூறி வந்தனர். அவரிடம் விசாரித்த போது, 'என்னிடம் யாருமே தரவில்லை' என்று சிம்பிளாக கூறி முடித்துக் கொண்டார்.தற்போது வயது முதிர்ச்சி, உடல்நலம் பாதிப்பு உள்ளிட்ட சூழ்நிலையில் எம்.சம்பத்குமார் வசம் இருந்த நிலத்தின் ஆவணங்களை, தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலாவிடம், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் ஒப்படைத்தார்.ஏற்கனவே, காங்கிரஸ் கட்சி அலுவலகம் எப்படி அமைய வேண்டும் என்று, 'பிளான்' தயாரிக்கப்பட்டது. அதன்மூலம் கட்சிக்கு வருமானம் கிடைக்கும் வகையில் வணிக வளாகம் அமைக்கவும்திட்டமிட்டனர்.தங்கவயலில் காங்கிரஸ் அலுவலகத்துக்கான நில ஆவணங்கள் ரூபகலாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், அலுவலக கட்டடம் உருவாகி விடும் என்ற நம்பிக்கை உள்ளதாக கட்சி விசுவாசிகள் கருதுகின்றனர்.

வெண்கல சிலை

தங்கவயல் நகர காங்கிரஸ் தலைவராக சம்பத்குமார் இருந்த போது, ஆண்டர்சன்பேட்டை பஸ் நிலையத்தில் மறைந்த ராஜிவ் சிலை அமைக்கப்பட்டது. 25 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல், கிழிந்த துணியால் மூடப்பட்டு காணப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்த சிமென்ட் சிலையை அகற்றி, வெண்கல சிலை அமைக்கப்படும் என்று தலைவர்கள் அறிவித்தனர். ஆனால், இதுவரை புதிய சிலை அமைக்கப்பட வில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

SRM
பிப் 11, 2025 18:36

காங்கிரசுக்கு சமாதி கட்ட அந்த இடத்தை பயன்படுத்தலாம்.


VENKATASUBRAMANIAN
பிப் 11, 2025 08:16

இதுதான் இன்றைய காங்கிரஸ் நிலை. முனியப்பா எத்தனை ஆண்டுகளாக கோலார் எம்எல்ஏ இருந்தார். ஒரு இடம் வாங்கி அலுவலகம் கட்ட முடியவில்லையா.அவருக்கு எவ்வளவு சொத்து உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை