| ADDED : மார் 19, 2024 11:02 PM
காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு குறித்து, புதுடில்லியில் நேற்று அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இன்று பட்டியல் வெளியாகிறது.லோக்சபா தேர்தலுக்கு, ஏழு தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல், இம்மாதம் 8ம் தேதி அறிவிக்கப்பட்டது. இன்னும் 21 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டும்.இது குறித்து, காங்கிரஸ் மேலிடம் பல கட்ட ஆலோசனை நடத்தியும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் புதுடில்லயில் நேற்றிரவு காங்., மத்திய தேர்தல் குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.எம்.பி., சோனியா, கர்நாடக மேலிட பொறுப்பாளர்கள் ரன்தீன்சிங் சுர்ஜேவாலா, மயூரா ஜெயகுமார், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக கூட்டம் நடந்தது.பின், முதல்வர் சித்தராமையா கூறுகையில், ''ஏற்கனவே அறிவித்தது போக, மீதியுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. சாதக, பாதகங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இன்று (நாளை) வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்,'' என்றார்.அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கட்சி தலைவர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டாலும், சில தொகுதிகளுக்கு தகுதியான வேட்பாளர் கிடைக்கவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.- நமது நிருபர் -