காங்., அரசை அகற்றாமல் துாங்க மாட்டேன்! முன்னாள் பிரதமர் தேவகவுடா சபதம்
ராம்நகர்: ''காங்கிரஸ் அரசை அகற்றாமல், நான் துாங்க மாட்டேன்,'' என, முன்னாள் பிரதமர் தேவகவுடா சபதம் எடுத்துள்ளார்.ராம்நகரின் சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் போட்டியிடும் ம.ஜ.த., வேட்பாளர் நிகிலை ஆதரித்து அவரது தாத்தாவும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா சக்கெரே கிராமத்தில் நேற்று பேசியதாவது:சக்கெரே கிராமத்திற்கு முதன்முறையாக வந்துள்ளேன். நிகில் இரண்டு முறை தேர்தலில் தோற்றுவிட்டார். மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்றார். ஆனால் நான் கூறியதால் தான் போட்டியிடுகிறார்.கடந்த 1973ல் நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அப்போதைய முதல்வர் தேவராஜ் அர்சை எதிர்த்துப் போராடினேன்.என் பேரனை வெற்றி பெற வைக்க, நான் இங்கு வரவில்லை. அடுத்த சில மாதங்களில் அரசின் ஐந்து உத்தரவாத திட்டங்களும் நிறுத்தப்படும். ஐந்து திட்டங்களில் ஒன்று ஏற்கனவே காலாவதியாகிவிட்டது.தெலுங்கானா லோக்சபா தேர்தலுக்காக வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு செய்த பணத்தை பயன்படுத்தினர். மக்களுக்கு எதிரான காங்கிரஸ் ஆட்சியை அகற்றும் வரை நான் துாங்க மாட்டேன். என் மகன் குமாரசாமிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது அரசியல் சதி. இதை பார்த்து நாங்கள் பயப்பட மாட்டோம். நிகில் சட்டசபைக்கு செல்வது 100 சதவீதம் உண்மை.நான் தான் சித்தராமையாவை, நிதி அமைச்சர் ஆக்கினேன். இப்போது நிதி துறையை கையில் வைத்துள்ள அவர், மாநிலத்தை திவால் நிலைக்கு கொண்டு செல்கிறார். எனது இறுதி மூச்சு இருக்கும் வரை, மக்களுக்காக போராடுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.