வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நீங்க ரெண்டுபேரும் இண்டி கூட்டணிதானே, அதனாலே யார் ஜெயிச்சா என்ன, அப்படின்னு மக்கள் நினைச்சுட்டாங்களோ
திருடர்கள், திருடர்களுடன்தான் கூட்டு வைப்பர் இதில் தகறாறு வருவது பங்கு பிரிப்பதில்தான்!
திருவனந்தபுரம்: ''கேரளாவில் உள்ளா ட்சி தேர்தலில் இடது ஜனநாயக முன்னணிக்கான வாய்ப்புகளை, பா.ஜ.,வுடன் கைகோர்த்து காங்கிரஸ் தடுக்கிறது'' என, அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார் . கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி அமைந்துள்ளது. இங்கு சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், பெரும்பாலான இடங்களை எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கைப்பற்றியது. ஆளும் இடது ஜனநாயக முன்னணி பின்னடைவை சந்தித்த நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சி உட்பட சில இடங்களில் பரவலாக பா.ஜ., வெற்றி பெற்றது. திருச்சூர் மாவட்டத்தின் மட்டத்துார் பஞ்சாயத்தில், மொத்தமுள்ள 24 இடங்களில், இடது ஜனநாயக முன்னணி 10 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி எட்டு இடங்களிலும், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நான்கு இடங்களிலும் வென்றுள்ளன. இரு இடங்களை சுயேச்சைகள் கைப்பற்றினர். இதில், சுயேச்சையாக வென்ற கே.ஆர்.செப்புக்கு ஆதரவளிக்க ஐக்கிய ஜனநாயக முன்னணி முடிவு செய்திருந்தது. ஆனால், தேர்தலுக்கு முன்பாகவே அவர் இடது ஜனநாயக முன்னணியுடன் கூட்டு சேர்ந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் எட்டு பேரும், தங்கள் கட்சி பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்தனர். இதையடுத்து, காங்கிரசுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய டெய்சி ஜோசப் மட்டத்துார் பஞ்சாயத்து தலைவராக தேர்வாகியுள்ளார். இதன் வாயிலாக, மட்டத்துார் பஞ்சாயத்தில், 23 ஆண்டு கால கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது. இது, கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: மட்டத்துார் பஞ்சாயத்து தேர்தலில் நடந்த செயல், தீய போக்கை வெளிப்படுத்துகிறது. அதிகாரத்தை கைப்பற்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், பா.ஜ.,வுடன் இணைந்துள்ளனர். இது, காங்கிரசில் இருப்பவர்கள் ஒரே இரவில் பா.ஜ.,வுக்கு மாற தயங்க மாட்டார்கள் என்பதை நிரூபணமாக்கியுள்ளது. கை சின்னத்தை தாமரையாக மாற்றுவதில் காங்., தலைவர்கள் எந்த தார்மீக மோதலையும் உணரவில்லை. இது போன்ற செயல் கேரளாவில் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை. மட்டத்துார் பஞ்சாயத்தில் நடந்த செயல் மாநிலம் முழுதும் நடக்க வாய்ப்புள்ளது. அருணாச்சல பிரதேசம், கோவா மற்றும் புதுச்சேரியில் காணப்பட்ட இந்த நடத்தை, கேரளாவிலும் தற்போது அரங்கேறியுள்ளது வேதனையளிக்கிறது. இது தொடர்பாக, காங்கிரஸ் தலைமை தெளிவாக பதிலளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்து காங்கிரசைச் சேர்ந்த கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் கூறுகையில், “இடது ஜனநாயக முன்னணி, மட்டத்துார் பஞ்சாயத்து தேர்தலில் ஒரு சுயேச்சையை ஆதரிக்க முடிவு செய்தது. ''காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்கள் கட்சி பொறுப்பில் இருந்து விலகி, மற்றொரு சுயேச்சையை ஆதரித்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்கவில்லை. வேறு பிரச்னை எதுவும் இல்லாததால், ஆளுங்கட்சி மட்டத்துார் பிரச்னையை எழுப்பியுள்ளது,” என்றார்.
மாநகராட்சி அலுவலகத்தை காலி செய்வது தொடர்பாக, திருவனந்தபுரத்தின் வட்டியூர்க்காவு எம்.எல்.ஏ-.,வாக உள்ள பிரசாந்த் மற்றும் பா.ஜ.,வைச் சேர்ந்த சாஸ்தாமங்கலம் கவுன்சிலர் ஸ்ரீலேகா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் நோக்கத்துடன் ஸ்ரீலேகா செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள பிரசாந்த், “அரசு அலுவலகத்தை காலி செய்யுமாறு ஒரு எம்.எல்.ஏ.,வை கூறுவது பொருத்தமற்றது,” என தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு மார்ச் 31 வரை அலுவலகத்தை காலி செய்ய மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்ரீலேகா கூறுகையில், “எம்.எல்.ஏ., பிரசாந்த் மீது எனக்கு தனிப்பட்ட பிரச்னை இல்லை. கட்டடம் திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு சொந்தமானது. அதன் பயன்பாட்டின் மீது மாநகராட்சிக்கு முழு அதிகாரம் உள்ளது,” என தெரிவித்துள்ளார்.
நீங்க ரெண்டுபேரும் இண்டி கூட்டணிதானே, அதனாலே யார் ஜெயிச்சா என்ன, அப்படின்னு மக்கள் நினைச்சுட்டாங்களோ
திருடர்கள், திருடர்களுடன்தான் கூட்டு வைப்பர் இதில் தகறாறு வருவது பங்கு பிரிப்பதில்தான்!