லைசென்சுடன் காங்., ஊழல் மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு
பெங்களூரு: ''ஒவ்வொரு துறையிலும், ஊழல் நடக்கிறது. காங்கிரசுடையது 100 சதவீதம் கமிஷன் அரசு. லைசென்சுடன் ஊழல் செய்கின்றனர்,'' என பா.ஜ.,வின் முன்னாள் அமைச்சர் அஸ்வத் நாராயணா குற்றம்சாட்டினார்.இது குறித்து, பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:கமிஷன் அடிப்பதில் காங்கிரசார் நிபுணர்கள். அனைத்து துறைகளிலும் ஊழல் தாண்டவமாடுகிறது. மத்திய அமைச்சர் குமாரசாமி, தேவையின்றி அரசின் மீது குற்றம்சாட்டவில்லை. அவர் குற்றம்சாட்டி விட்டு ஒளியவில்லை.அனைத்து துறைகளிலும், கமிஷன் பெறுகின்றனர். இது பொய் இல்லை. விதான் சவுதா கம்பங்களே, காங்கிரஸ் அரசின் ஊழல்களை கூறும். வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில், 100 சதவீதம் ஊழல் நடந்ததை, அக்கட்சியினர் ஒப்புக்கொண்டனர். சந்திரசேகரின் தற்கொலையால், இந்த ஊழல் வெளிச்சத்துக்கு வந்தது.பரசுராம் தற்கொலை செய்து கொண்டது ஏன். எஸ்.ஐ., பதவிக்கு இடமாற்றம் செய்ய 35 லட்சம் ரூபாய் கமிஷன் பெற்றதற்கு சாட்சிகள் உள்ளதே. முடா முறைகேட்டுக்கும் சாட்சிகள் உள்ளன. ஒப்பந்ததாரர் சச்சின் தற்கொலை விஷயத்திலும், ஆதாரங்கள் உள்ளன. கலால் துறை, சுகாதாரத்துறைகளில் கமிஷன், ஊழல் அதிகம். அமைச்சர்களுக்கும் கமிஷன் கொடுக்க வேண்டும்.ஒரு பக்கம் சமுதாயத்தில் பிரிவினையை ஏற்படுத்துகின்றனர். ஊழல் செய்யவும் ஜாதி பெயரை பயன்படுத்துகின்றனர். ஜாதி பெயரில் அனுதாபம் பெறுகின்றனர். எங்கள் மீது 40 சதவீதம் கமிஷன் குற்றச்சாட்டு சுமத்தினர். லோக் ஆயுக்தா எங்களுக்கு நற்சான்றிதழ் அளித்துள்ளது. எங்கள் அரசின் முதல்வர் மீது குற்றம்சாட்டிய போது, காங்கிரசார் என்ன ஆதாரங்களை கொடுத்தனர். ஆனால் காங்கிரஸ் அரசு மீதான குற்றச்சாட்டுகளுக்கு, ஆவணங்கள் உள்ளன. இவர்கள் லைசென்சுடன் ஊழல் செய்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.