உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உல்லால் அருகே ரயிலை கவிழ்க்க சதி

உல்லால் அருகே ரயிலை கவிழ்க்க சதி

மங்களூரு : உல்லால் அருகே, மர்ம நபர்கள் ரயில் தண்டவாளத்தில் ஜல்லி கற்களை கொட்டி, ரயிலை கவிழ்க்க முயற்சி செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.சமீப நாட்களாக, நாட்டின் பல்வேறு இடங்களில் ரயில்களை கவிழ்க்க சதி செய்வது அதிகரிக்கிறது. இது போன்ற சம்பவம், மங்களூரில் நடந்துள்ளது.தட்சிண கன்னடா, உல்லால் அருகில், மங்களூரில் இருந்து, கேரளாவுக்கு செல்லும் வழித்தடத்தில், தண்டவாளம் மீது நேற்று முன்தினம் நள்ளிரவு, மர்ம நபர்கள் ஜல்லி கற்களை கொட்டி வைத்தனர். இதில் ரயில்கள் ஓடும் போது, பெரும் சத்தம் கேட்டது. நில நடுக்கம் ஏற்படுகிறதோ என, பயணியர் அஞ்சினர்.இந்த வழியாக ரயில்கள் செல்லும் போது, இத்தகைய சத்தம் கேட்டதால், அப்பகுதியினரும் கிலி அடைந்தனர்.தண்டவாளம் உள்ள பகுதியில் சத்தம் கேட்டதால், சிலர் அங்கு சென்று ஆராய்ந்தனர். அப்போது தண்டவாளத்தில், ஜல்லி கற்கள் கொட்டி கிடப்பதை கண்டனர். உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கும், உல்லால் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த ரயில்வே அதிகாரிகள், போலீசார் ஜல்லி கற்களை அகற்றினர். தண்டவாளத்தின் அக்கம், பக்கம் உள்ள பகுதிகளுக்கு சென்று, 'ரயில் தண்டவாளம் இருப்பதால், கவனமாக இருக்க வேண்டும். 'ரயில்கள் மீது கற்களை வீசுவது போன்ற செயலை செய்ய கூடாது. தண்டவாளத்தின் மீது சந்தேகத்துக்குரிய பொருட்கள் இருந்தால், உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும்' என, அறிவுறுத்தினர்.தண்டவாளம் மீது, ஜல்லி கற்களை போட்டு ரயிலை கவிழ்க்க சதி செய்தவர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம், பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை