வலுவான ஜனநாயகத்துக்கு அரசியலமைப்பு கடமைகளே அடித்தளம்: பிரதமர் மோடி
புதுடில்லி: 'நாட்டு மக்கள் அனைவரும் அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற வேண்டும். இந்த கடமைகளே ஒரு வலுவான ஜனநாயகத்திற்கு அடித்தளம்' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம், 1949 நவ., 26ல் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950 ஜன., 26ல் நடைமுறைக்கு வந்தது. பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, 2015 முதல், நவ., 26ஐ அரசியலமைப்பு தினமாக கொண்டாடி வருகிறது.மகத்தான பணி
இந்நிலையில், அரசியலமைப்பு தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நேற்று எழுதியுள்ள கடிதம்: நாட்டு மக்கள் அனைவரும் அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற வேண்டும். இந்த கடமைகளே வலுவான ஜனநாயகத்திற்கு அடித்தளம். ஓட்டளிக்கும் உரிமையை பயன்படுத்துவதன் மூலம், ஜனநாயகத்தை வலுப்படுத்த முடியும். பள்ளி, கல்லுாரிகளில் அரசியலமைப்பு தினத்தை கொண்டாட வேண்டும்.இந்த தினத்தில் அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம். அவர்களின் தொலைநோக்கு பார்வை, 'வளர்ந்த இந்தியா' என்ற இலக்கை நோக்கி நாம் முன்னோக்கி செல்ல ஊக்குவிக்கிறது. அரசியலமைப்பு சக்தி தான், எளிய குடும்பத்தில் இருந்து வந்த என்னை, 24 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் தொடர்ந்து பணியாற்ற உதவியுள்ளது. இது, என்னை போன்ற பலருக்கு கனவு காணும் சக்தியையும், அந்த கனவுகளை நனவாக்கும் வலிமையையும் அளித்துள்ளது.சர்தார் வல்லபபாய் படேல், பிர்சா முண்டா ஆளுமைகளின், 150வது பிறந்த நாளைக் கொண்டாடப்படும் நிலையில், இந்தாண்டு அரசியலமைப்பு தினம், மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த இரு தலைவர்களும் நாட்டுக்கு மகத்தான பணிகளை செய்துள்ளனர்.கடமை உணர்வு
வல்லபபாய் படேலின் தொலைநோக்கு பார்வை, நாட்டின் அரசியல் ஒற்றுமையை உறுதி செய்தது. அவரது உத்வேகமும், உறுதியான துணிச்சலுமே, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ய எங்களை வழிநடத்தியது.நம் ஒவ்வொரு செயலும் அரசியலமைப்பையும், நாட்டின் நலன்களையும் வலுப்படுத்த வேண்டும். அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் கனவை நனவாக்குவது நம் பொறுப்பு. இந்த கடமை உணர்வுடன் செயல்பட்டால், நாட்டின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் பன்மடங்கு பெருகும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.ஜனநாயகத்தின் தாய்!
நம் அரசியலமைப்பு சட்டம், 'பாரதம் ஒன்று' என்ற கொள்கையை நிலைநாட்டுகிறது. மக்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த நாடும் மகத்தானதாக மாற முடியாது. எனவே, 'வளர்ந்த இந்தியா' என்ற இலக்கை அடைய, கடமை உணர்வுடன் அனைவரும் செயல்பட வேண்டும். ஜனநாயகத்தின் தாயாக நம் நாடு விளங்குகிறது. - சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதிபெருமையின் ஆவணம்
உலகிற்கே இந்தியா ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது. மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நம் அரசியலமைப்பு சட்டம் தேசிய பெருமையின் ஆவணம். இது நாட்டின் அடையாளத்திற்கான ஆவணம். காலனித்துவ மனப்பான்மையைக் கைவிட்டு, தேசியவாத பார்வையை ஏற்று நாட்டை முன்னேற்றுவதற்கான ஆவணம் இது. -திரவுபதி முர்மு ஜனாதிபதி