| ADDED : ஜன 25, 2025 09:44 PM
கோல்கட்டா: வங்கதேச எல்லையில், சுரங்கம் அமைத்து பதுக்கி வைத்திருந்த ரூ.1.4 கோடி மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட இருமல் டானிக் பாட்டில்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் இந்தியா-வங்கதேச எல்லைக்கு அருகே, கடத்தல் பொருட்களை பதுக்கி வைப்பதற்காக அமைக்கப்பட்ட சுரங்கம் போன்ற நிலத்தடி தொட்டிகளை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர்.அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.4 கோடி மதிப்புள்ள 62,200 தடைசெய்யப்பட்ட இருமல் டானிக் பென்செடைல் பாட்டில்களைக் கைப்பற்றினர்.இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது:எங்களுக்கு கிடைத்த உளவுத்துறையின் தகவலின்படி,எல்லை புறக்காவல் நிலையமான துங்கியைச் சேர்ந்த பி.எஸ்.எப்., பணியாளர்கள், உள்ளூர் போலீசாருடன் இணைந்து, மஜ்தியா நகருக்கு அருகிலுள்ள நகாட்டா கிராமத்தில் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினோம்.இந்த நடவடிக்கையின் போது, மூன்று நிலத்தடி சுரங்க அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அடர்ந்த மரங்களுக்கு அடியில் இத்தகைய சுரங்க அமைப்பு இருந்தது. சுரங்கத்தினுள் ஒளி புகாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடத்தல்காரர்கள் செய்திருந்தனர்.இருமல் டானிக் பென்செடைல், வங்கதேசத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு அதிக தேவை இருப்பதால் இந்தியாவிலிருந்து கடத்தப்படுகிறது. முழு கடத்தல் வலையமைப்பையும் அகற்ற தொடர் விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.