உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சித்தராமையாவுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சித்தராமையாவுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

பெங்களூரு, 'முடா' எனும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையத்தில் விதிமீறலாக 14 வீட்டு மனைகள் பெற்றது தொடர்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, குடும்ப உறுப்பினர்கள் மீது லோக் ஆயுக்தாவில் சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா, ஆபிரகாம் உட்பட மூவர் புகார் அளித்தனர். இதன்படி, லோக் ஆயுக்தாவும் விசாரணை நடத்தி வருகிறது.மேலும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஸ்நேகமயி கிருஷ்ணா தாக்கல் செய்துள்ள மனுவில், 'போலீஸ் துறை, லோக் ஆயுக்தா போன்ற மாநில விசாரணை அமைப்புகள், முதல்வரின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. எனவே, நியாயமான விசாரணை நடக்காது. இதனால், இவ்வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.மனுவை நேற்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா, 'மனு தொடர்பாக மத்திய - மாநில அரசுகள், லோக் ஆயுக்தா மற்றும் சி.பி.ஐ., முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, அவரது சகோதரர் மல்லிகார்ஜுன சுவாமி, நில உரிமையாளர் தேவராஜ் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.மேலும், 'லோக் ஆயுக்தா போலீசார் இதுவரை நடத்திய விசாரணை அறிக்கையை, வரும் 25ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், 'முடா' வழக்கு விசாரணைக்கு இன்று மைசூரு லோக் ஆயுக்தா அலுவலகத்தில் முதல்வர் சித்தராமையா ஆஜராக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !