உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குருவாயூர் கோவிலில் உதயாஸ்தமன பூஜை மாற்றமின்றி நடத்த கோர்ட் உத்தரவு

குருவாயூர் கோவிலில் உதயாஸ்தமன பூஜை மாற்றமின்றி நடத்த கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'கேரளாவின் திருச்சூரில் உள்ள குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலின், உதயாஸ்தமன பூஜை எந்த மாறுதலும் இல்லாமல் நடக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ.,வை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. சிக்கல் இங்குள்ள திருச்சூர் மாவட்டத்தில் இருக்கும் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் ஏகாதசி நாளில், மூலவருக்கு அதிகாலை முதல் மாலை வரை இடைவிடாமல் பூஜைகள் நடக்கும். மொத்தம், 18 வகையான பூஜைகள், ஹோமங்கள், அபிஷேகங்கள் மற்றும் பிற வழிபாடுகள் நடந்து கொண்டே இருக்கும். அதாவது சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை பூஜை நடத்தப்படும். இதனால், உதயாஸ்தமன பூஜை என அழைக்கப்படுகிறது. இந்த பூஜையின் போது அவ்வப்போது நடை அடைக்கப்படும் என்பதால், பக்தர்கள் தரிசனம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், கடந்த ஆண்டு ஏகாதசி நாளின்போது, கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் உதயாஸ்தமன பூஜையை குருவாயூர் தேவசம் போர்டு ரத்து செய்தது. இதற்கு கோவில் தந்தரியும் ஒப்புதல் தெரிவித்ததாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேவசம் போர்டின் நடவடிக்கையை கண்டித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், 'ஏகாதசி நாளில் உதயாஸ்தமன பூஜை நடத்தப்படுவது, 1972ம் ஆண்டு களுக்கு முன் இருந்தே பின்பற்றப்பட்டு வருகிறது. 'ஆதிசங்கரர் வகுத்து கொடுத்த பூஜை விதிமுறைகளை மாற்றவோ, நிறுத்தவோ யாருக்கும் உரிமை இல்லை' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் உதயாஸ்தமன பூஜையை ரத்து செய்தது கண்டிக்கத்தக்கது. எனவே, இந்த ஆண்டு டிச., 1ம் தேதி வரும் ஏகாதசி நாளில் உதயாஸ்தமன பூஜை எந்த மாறுதலும் இல்லாமல் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து, வழக்கின் அடுத்த விசாரணையை 2026, மார்ச் மாதத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ