உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முல்லை பெரியாறு அணை விவகாரம்; தமிழகத்துக்கு சாதகமாக கோர்ட் உத்தரவு

முல்லை பெரியாறு அணை விவகாரம்; தமிழகத்துக்கு சாதகமாக கோர்ட் உத்தரவு

முல்லை பெரியாறு அணை பராமரிப்பு விவகாரத்தில், கேரள அரசு முட்டுக்கட்டை போட்டு வந்த நிலையில், தமிழக அரசுக்கு சாதகமான உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்தது.முல்லை பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நடந்து வருகிறது. கடந்த விசாரணையில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விடாமல் கேரள அரசு முட்டுக்கட்டை போடுவதாக தமிழக அரசு குற்றஞ்சாட்டியிருந்தது.இந்த வழக்கை, நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:முல்லை பெரியாறு அணையை சுற்றியுள்ள மரங்களை வெட்ட, நான்கு வாரங்களில் அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பான தமிழக அரசின் விண்ணப்பத்தின் மீது, கேரள அரசு உடனடியாக முடிவு எடுக்க வேண்டும். முல்லை பெரியாறு அணை முதல், வல்லக்கடவு சாலை வரை உள்ள காட்டு சாலையை கேரள அரசே சீரமைக்க வேண்டும். இந்த பணிகள் நடக்கும் போது, தமிழக அரசு அதிகாரிகள் உடனிருக்க வேண்டும். இதற்கான செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும். அதே போல், அணை பகுதியில் மராமத்து பணிகளை மேற்கொள்ள, படகு ஒன்றை தமிழக அரசுக்கு கேரளா வழங்க வேண்டும். இது தவிர, வேறு ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அது குறித்து முல்லை பெரியாறு மேற்பார்வை குழுவிடம் முறையிடலாம். அது தொடர்பாக, நான்கு வாரங்களுக்குள் அந்த குழு முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்ட அமர்வு, வழக்கை ஒத்திவைத்தது. - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

VENKATASUBRAMANIAN
மே 20, 2025 07:39

இப்போது கம்யூனிஸ்டுகள் வாயை திறப்பார்களா. கவர்னருக்கு எதிரான தீர்ப்பில் கனகராஜ் லெனின் அருணன் முத்தரசன் போன்றோர் கத்தினார்கள் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை