உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடும்ப பாரத்தை தோளில் சுமக்கும் கிரிக்கெட் வீராங்கனை ராஜேஸ்வரி

குடும்ப பாரத்தை தோளில் சுமக்கும் கிரிக்கெட் வீராங்கனை ராஜேஸ்வரி

ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய கிரிக்கெட்டில், இப்போது பெண்களும் முத்திரை பதித்து வருகின்றனர்.தற்போது ஸ்மிருதி மந்தனா, ஸ்ரேயங்கா பாட்டீல், ராஜேஸ்வரி கெய்க்வாட் ஆகியோர் முக்கிய வீராங்கனைகளாக உள்ளனர்.

பின்தங்கிய மாவட்டம்

இவர்களில் ராஜேஸ்வரி, கர்நாடகாவின் வட மாவட்டமான வளர்ச்சியில் பின்தங்கிய விஜயபுராவில் இருந்து வந்தவர். சிறு வயது முதல் அவருக்கு கிரிக்கெட்டில் ஆர்வம். அவரது கிரிக்கெட் ஆர்வத்திற்கு பெற்றோரும் தடை போடவில்லை.விஜயபுராவில் உள்ள கிரிக்கெட் பயிற்சி மையத்தில், பயிற்சிக்கு சேர்ந்தார். அனைத்து விதத்திலும் அவருடைய தந்தை உதவியாக இருந்தார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால், மாநில அளவிலான போட்டிகளில், விளையாட இடம் கிடைத்தது.

பங்களிப்பு

அங்கு அவர், தனது திறமையை வெளிப்படுத்தியதால் கடந்த 2014 ல் தேசிய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். இலங்கைக்கு எதிராக போட்டியில் அறிமுகமானார்.அந்த தொடர் முடிந்த நிலையில், மாரடைப்பால் அவரது தந்தை இறந்தார். இதனால் மொத்த குடும்பத்தையும் சுமக்கும் பொறுப்பு ராஜேஸ்வரி தோளில் விழுந்தது. குடும்பத்திற்காக நன்றாக விளையாட வேண்டும் என்ற நோக்கில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.கடந்த 2017 ல் நடந்த மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில், இங்கிலாந்து அணியிடம் இந்தியா 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆனாலும் அந்த உலகக் கோப்பையில் ராஜேஸ்வரி, இந்திய அணிக்காக நிறைய பங்களிப்பு கொடுத்தார்.

எனது முன்னுரிமை

இடது கை ஆர்த்தடக்ஸ் பந்து வீச்சாளரான அவர், உலகக்கோப்பை போட்டியில் 15 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.இந்திய அணி நாடு திரும்பியதும் அப்போது நிர்வாக துறை அமைச்சராக இருந்த எம்.பி.பாட்டீல், ராஜேஸ்வரியை பாராட்டி, பரிசாக கார் வழங்கினார். ஆனால் அந்த காரை வாங்க மறுத்த ராஜேஸ்வரி, 'எங்கள் குடும்பத்திற்கு என்று சொந்தமாக வீடு இல்லை. வீடு வாங்குவதே எனது முன்னுரிமை' என்று கூறி அனைவரின் கண்களையும் கலங்க வைத்தார்.

எத்தகைய தியாகம்

கடந்த 2020 ல் ஆஸ்திரேலியாவில் நடந்த மகளிர் டி - 20 உலகக்கோப்பை இந்திய அணியில் அவர் இடம்பிடித்தார். கடந்த 2022-ல் நியூசிலாந்தில் நடந்த ஒரு நாள் உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய அணியில் அங்கம் வகித்தார். இந்தப்போட்டிகளில், அதிக ரன்கள் கொடுக்காமல், சிக்கனமாக பந்து வீசி தனது திறமையை நிரூபித்தார்.இதுவரை 44, டி - 20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 54 விக்கெட்டுகளும்; 64 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி, 99 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.'குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரும் பொறுப்பு என்னிடம் உள்ளது. இதற்காக எத்தகைய தியாகம் செய்வதற்கும் தயார்' என்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அளித்த பேட்டியில் ராஜேஸ்வரி கூறியிருந்தது நினைவு கூறத்தக்கது -- நமது நிருபர் - -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ