உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிரைம் பீட்

கிரைம் பீட்

பெண்ணுடன் இருந்த சேல்ஸ்மேனை கொன்ற கும்பல்

புதுடில்லி:கிழக்கு டில்லியின் பூங்கா ஒன்றில், 24 வயது நபர் மர்ம கும்பலால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். முன்னதாக, அவரை தாக்கிய அந்த கும்பல், அவரின் பெண் நண்பரையும் தாக்கி, பணம், நகைகளை கொள்ளையடித்தது. கிழக்கு டில்லியில் உள்ள தில்ஷாத் கார்டன் என்ற பகுதியில் உள்ள மான்கள் பூங்காவிற்கு, நேற்று முன்தினம் மாலையில், 24 வயது விரேஷ் என்பவர் சென்றிருந்தார். அவருடன் அவரின் பெண் நண்பரும் அங்கு இருந்தார். அப்போது அவர்களை சுற்றி வளைத்த கும்பல், அவர்களை கண்மூடித்தனமாக தாக்கி, அவர்கள் அணிந்திருந்த நகை மற்றும் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்தது. அதை தட்டிக் கேட்ட விரேஷை அவர்கள் கத்தியால் குத்தினர். இதில், படுகாயம் அடைந்த அவர், ஜி.டி.பி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக போலீசார் அறிக்கை அளித்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், விரேஷின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுமதித்து, பின், உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் படி, போலீசார் விசாரித்து வருகின்றனர். முன் விரோதம் காரணமாக அந்த வாலிபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.

நோயாளிகளுக்கு சிகிச்சை போலி டாக்டர் சிக்கினார்

பரீதாபாத்:டில்லி அருகே உள்ள, ஹரியானாவின் பரீதாபாத் நகரில் தினமும், 20 - 30 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் போலீசில் சிக்கினார். பரீதாபாத் நகரின் பர்வதியா காலனியில், மொபின் அஹமது என்பவர், நோயாளிகளுக்கு கொடுத்த மருந்து, மாத்திரைகளால் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மூத்த மருத்துவ அதிகாரி மஞ்சீத் சிங்குடன் அந்த இடத்திற்கு விரைந்த போலீசார், மொபின் அஹமது பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததை அறிந்து, கையும், களவுமாக அவரை கைது செய்தனர். டாக்டர் பட்டம் பெற்றது குறித்த ஆவணங்களை அவரிடம் போலீசார் கேட்ட போது, அவை இல்லாததால், அவர் அவற்றை அளிக்க திணறினார். போலீசாரின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற அவரை கிடுக்கிப்பிடி போட்டு, உட்கார வைத்த போலீசார், தொடர்ந்து விசாரித்தனர். அப்போது தான், டாக்டருக்கு படிக்காமல், போலி சான்றிதழை காட்டி, அப்பாவி மக்களை ஏமாற்றி, தினமும், 20 - 30 பேருக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது. அவர் அளித்த சிகிச்சையில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் டில்லியில் 'என்கவுன்டர்'

புதுடில்லி:உ.பி.,யின் மீரட் நகரில் நடந்த கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்தவரை, என்கவுன்டர் பாணியில் போலீசார் சுட்டு பிடித்தனர். ஹம்சா என்ற நபர், மீரட் நகரில் நடந்த கொலை தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்தார். அவர் வட மேற்கு டில்லியின் ரோஹிணி என்ற இடத்தில் பதுங்கியிருப்பதாக, டில்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உ.பி., போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அந்த இடத்தை சுற்றி வளைத்த போலீசார், அந்த நபரை சரணடையும் படி எச்சரித்தனர். எனினும், போலீசார் மீது ஹம்சா துப்பாக்கிச்சூடு நடத்தியதால், அவரை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில், படுகாயம் அடைந்து அவர் விழுந்ததும், அவரை சுற்றி வளைத்த போலீசார், பின், கைது செய்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை