உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமர்சனங்களே ஜனநாயகத்தின் ஆன்மா பாட்காஸ்ட் பேட்டியில் பிரதமர் வெளிப்படை

விமர்சனங்களே ஜனநாயகத்தின் ஆன்மா பாட்காஸ்ட் பேட்டியில் பிரதமர் வெளிப்படை

புதுடில்லி: 'பாட்காஸ்ட்' எனப்படும் இணையதளம் மற்றும் மொபைல் போன்களில் வெளியிடப்படும் ஆடியோ நிகழ்ச்சி வாயிலாக, பல உலக தலைவர்களின் பேட்டிகளை வெளியிட்டுள்ளவர், அமெரிக்காவைச் சேர்ந்த, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர், தொழில்நுட்ப நிபுணரான, லெக்ஸ் பிரிட்மேன். இவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் மூன்று மணி நேரம் கலந்துரையாடிய நிகழ்ச்சி, நேற்று வெளியிடப்பட்டது.கடந்த ஜனவரியில், 'ஜெரோதா' நிறுவனத்தின் இணை நிறுவனரான, பாட்காஸ்ட் நிபுணர் நிகில் காமத்துக்கு, பிரதமர் மோடி இதுபோன்ற பேட்டி அளித்திருந்தார். அந்த வரிசையில், பிரதமரின் இரண்டாவது பாட்காஸ்ட் பேட்டி இது.சுய ஒழுக்கம்இந்த பேட்டியின் துவக்கத்தில், ''நான் கடந்த இரண்டு நாட்களாக, வெறும் தண்ணீர் மட்டும் குடித்து உபவாசம் இருந்தேன். அப்போது தான், உங்களுடைய ஆன்மிக நிலைக்கு கிட்டத்தட்ட நெருங்கி, ஒரே மன ஓட்டத்துடன் இருக்க முடியும் என்று நினைத்தேன்,'' என, பிரிட்மேன் கூறினார்.பேட்டியில் மோடி கூறியதாவது:என்னுடைய பலம், என்னுடைய பெயரில் இல்லை. நாட்டின் 140 கோடி மக்களின் ஆதரவு மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான பாரம்பரியம், கலாசாரமே என் பலம்.உலக தலைவர்களுடன் நான் கைகுலுக்கும்போது, 140 கோடி இந்தியர்களும் கைகுலுக்குவதாகவே நான் கருதுகிறேன்.இந்தியா, கவுதம புத்தர், மஹாத்மா காந்தியின் மண். நாங்கள் எப்போதும் சண்டை, சச்சரவுகளை விரும்பவில்லை. நல்லிணக்கத்தையே விரும்புகிறோம். அதனால்தான், உலகில் அமைதி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்போது, அந்தப் பொறுப்பை ஏற்கத் தயாராக உள்ளோம்.நான் முதல் முறையாக பிரதமராக பதவியேற்றபோது, பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுத்தோம். அவர்கள் அமைதியின் பாதையை விரும்புவர் என்று நினைத்தோம். ஆனால், அது நடக்கவில்லை.எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். விமர்சனங்களே, ஜனநாயகத்தின் ஆன்மா. அது சிறந்த நிர்வாகம், நல்ல முடிவுகளை எடுக்க உதவுகிறது. நான், 50 ஆண்டுகளாக உபவாசம் இருந்து வருகிறேன். இது மத ரீதியிலான ஒரு நடவடிக்கையாக மட்டுமல்லாமல், சுய ஒழுக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.இரவு எவ்வளவு இருளாக இருந்தாலும், காலையில் நிச்சயம் வெளிச்சம் கிடைக்கும். இதுதான், இளைஞர்களுக்கு நான் கூற விரும்பும் அறிவுரை. பொறுமை மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். 100 மொழிகள்நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது என்பதை நான் மிகவும் நம்புகிறேன். நான் இங்கு ஏதோ ஒரு செயலுக்காக வந்துள்ளேன். அதற்காகவே, என்னை அந்த சக்தி அனுப்பி வைத்துள்ளது. நான் எப்போதும் தனிமையாக உணர்ந்ததில்லை. என்னை அனுப்பிய சக்தி என்னுடனேயே இருப்பதாகவே கருதுகிறேன். உங்களுக்குள் உள்ள மாணவரை எப்போதும் துாங்க வைத்து விடாதீர்கள்.இந்தியா என்பது பல ஆயிரமாண்டுகளுக்கு முன்பே நாகரிகமான நாடாக இருந்து வந்துள்ளது. இந்தியா என்பது கலாசாரத்தின் அடையாளம். இங்கு 100க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேச்சு வழக்குகள் உள்ளன.ஒவ்வொரு 40 - 50 கி.மீ., துாரத்துக்கும் இடையே, கலாசாரம், பழக்க வழக்கம் இங்கு மாறுபட்டு இருக்கும். ஆனாலும், இந்த நாட்டை ஒரு இழை இணைக்கிறது.இந்தியா உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடாக உள்ளது. கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், 98 கோடி பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றனர். இதில், 64 கோடி பேர் ஓட்டளித்தனர். இது மிகப் பெரும் சாதனை. இவ்வாறு அவர் கூறினார்.பிரதமர் நரேந்திர மோடியுடனான இந்த கலந்துரையாடல், என்னுடைய வாழ்க்கையில் மிகவும் சக்திவாய்ந்த ஒன்று. நான் பார்த்த வரையில், பிரதமர் மோடி வசீகரிக்கக் கூடிய மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர். பன்முகத்தன்மை மற்றும் சிக்கல்கள் நிறைந்த ஒரு நாட்டை ஒருங்கிணைத்த தலைவராக அவர் உள்ளார். அதனால்தான், கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் இருந்தாலும், உலக நாடுகளால் அவர் மதிக்கப்படுகிறார்.லெக்ஸ் பிரிட்மேன்பிரபல பாட்காஸ்டர்

கோத்ரா ரயில் எரிப்பு சோகம்

தன் பேட்டியில், குஜராத்தில், 2002ல் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த வன்முறைகள் குறித்து மோடி கூறியதாவது:கடந்த, 2002ல் குஜராத்தின் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. அந்த நேரத்தில் மக்கள் கொந்தளிப்பில் இருந்தனர். இதுவே, வன்முறைகளுக்கு காரணமானது. அந்த நேரத்தில், மத்தியில், எங்களுடைய அரசியல் எதிரிகள் ஆட்சியில் இருந்தனர்.அவர்கள், குஜராத் வன்முறை சம்பவத்தை வைத்து எங்கள் மீது முத்திரை குத்த நினைத்தனர். ஆனால், அது பலிக்கவில்லை. நீதிமன்றங்களும் எங்கள் மீது குற்றம் இல்லை என்று கூறின.குஜராத்தில் அதற்கு முன்பும் கலவரங்கள் நடந்துள்ளன. ஆனால், இதை மிகப் பெரிய கலவரமாக காட்டுவதற்கு முயற்சிகள் நடந்தன. குஜராத்தில், 2002ல் நடந்த கலவரத்துக்குப் பின், அங்கு இதுவரை எந்த ஒரு சம்பவமும் நடந்ததில்லை. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் மிகப் பெரிய கொடூரமான சம்பவமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

kulandai kannan
மார் 17, 2025 09:50

Podcast என்பதற்கு தமிழ் சொல் என்ன என்று தமிழ் புலவர்கள் ஸ்டாலினோ , உதயநிதியோ சொன்னால் நல்லது.


अप्पावी
மார் 17, 2025 15:39

ஆம்... இந்தில அந்த பிரச்சனையே கிடையாது. பாட்காஸ்ட் ஐ पास काण्ड நு அப்பிடியே எழுதி இந்தியை வளர்த்து அன்னிய அடையாளங்களையும் ஒழிப்பாங்க.


अप्पावी
மார் 17, 2025 09:32

அதுக்காக எல்லாத்துக்கும் நேரு தான் காரணம்னு விமர்சிப்பது நல்லாவா இருக்கு?


Kasimani Baskaran
மார் 17, 2025 04:29

விமர்சனங்கள் தரம்தாழ்ந்த வன்மமாக மாறும் பொழுதுதான் சிக்கல் வருகிறது. சிறுபான்மையினர்களின் ஆதரவில் மட்டுமே இயங்கும் பல கட்சிகள் துரதிஷ்டவசமாக, வன்மத்தின் அடிப்படையில் மட்டுமே கட்சி நடத்துகின்றன. காங்கிரஸ் மற்றும் திராவிடர்களை முன்னேற்ற வந்த கட்சிகள் இதற்க்கு நல்ல உதாரணம்.


முக்கிய வீடியோ