சுங்கக்கட்டணம் மோகன் தாஸ் பை அதிருப்தி
பெங்களூரு:பெங்களூரு விமான நிலைய சாலையில் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, தொழிலதிபர் மோகன் தாஸ் பை அதிருப்தி தெரிவித்துள்ளார்.பெங்களூரில் இருந்து பல்லாரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், தேவனஹள்ளி அருகே சடஹள்ளி என்ற இடத்தில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடியை கடந்ததும், விமான நிலையத்திற்குள் செல்லும் சாலை வந்து விடுகிறது.இந்நிலையில், சுங்கக் கட்டணம் வசூல் தொடர்பான கேள்விக்கு, ராஜ்யசபாவில் மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பதிலில், ''பெங்களூரு - பல்லாரி தேசிய நெடுஞ்சாலையில், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள சடஹள்ளி சுங்கச்சாவடியில் 2023 - 2024 நிதி ஆண்டில் 308 கோடி ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த சுங்கச்சாவடி 10.76 சதவீத பங்களிப்பை அளித்துள்ளது,'' என்றார்.இதுதொடர்பாக தொழிலதிபர் மோகன் தாஸ் பை, 'எக்ஸ்' வலைதள பதிவில், 'இந்தியாவின் எந்த விமான நிலைய சாலைக்கும் சுங்கச்சாவடி கட்டணம் இல்லை. ஆனால் பெங்களூருக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு? விமான நிலைய நுழைவு பகுதியில் உள்ள சுங்கசாவடிக்கு பதில் வேறு இடத்தில் அமைக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.மேலும், இந்த பதிவுடன் மத்திய நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோரையும், 'டேக்' செய்துள்ளார்.