புதுடில்லி: மோந்தா புயல் தயார்நிலை குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மோடி ஆலோசனை நடத்தினார். தென்கிழக்கு வங்கக்கடலில் மோந்தா புயல் உருவாகி உள்ளது. தற்போது அந்தமான் தீவுகளின் போர்ட் பிளேயரில் இருந்து, மேற்கு, தென்மேற்கிலும் , சென்னையில் இருந்து கிழக்கு, தென்கிழக்கில் 520 கி.மீ., தொலைவிலும், ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து, தென்கிழக்கு திசையிலும் நிலை கொண்டுள்ளது. மோந்தா புயல் மணிக்கு 17 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே, காக்கி நாடாவுக்கு அருகே தீவிர புயலாக இன்று மாலை அல்லது இரவில் கரையை கடக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், புயல் தயார்நிலை குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மோடி ஆலோசனை நடத்தினார். மோடி உடனான கலந்துரையாடலுக்குப் பிறகு, பிரதமர் அலுவலகத்துடன் ஒருங்கிணைக்குமாறு தனது மகன் நர லோகேஷுக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். முதல்வர் ஆலோசனை
இதற்கிடையே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். பாதிப்பு ஏற்படும் என வானிலை மையம் கணித்துள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பயிர்கள் சேதமடைவதை தடுக்க கால்வாய்கள், குளங்கள், ஏரிகளின் கரையோரங்களை வலுப்படுத்தவும், ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறையும் புயலின் நிலை குறித்து கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.உஷார் நிலையில் ஆந்திரா!
'மோந்தா' புயல் காரணமாக, ஆந்திராவின் காக்கிநாடா, கோனாசீமா, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, பாபட்லா, பிரகாசம், ஸ்ரீ பொட்டி ஸ்ரீராமுலு, நெல்லுார் மாவட்டங்களில் சில பகுதிகளில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. சித்துார், திருப்பதி உட்பட 16 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யலாம் என்பதால், 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. கர்னுால், அனந்த புரம், ஸ்ரீசத்யசாய் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் அனைத்து அரசு துறைகளும் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. மீட்புப் பணிக்கு துணை ராணுவமும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் தயார் நிலையில் உள்ளன.