உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு அரசியலமைப்பு குழப்பத்துக்கு வழிவகுக்கும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு அரசியலமைப்பு குழப்பத்துக்கு வழிவகுக்கும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ' மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஜனாதிபதி, கவர்னர்களுக்கு காலக்கெடு விதிப்பது அதிகார சமன்பாட்டை சீர்குலைப்பதோடு, அரசியலமைப்பு குழப்பத்துக்கு வழிவகுக்கும். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் தலையீடு முற்றிலும் தேவையற்றது' என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மனு தாக்கல் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் ரவி காலம் தாழ்த்துவதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, ஆர்.மஹாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 'சட்ட சபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது, ஒரு மாதத்துக்குள் கவர்னர்கள் முடிவெடுக்க வேண்டும். கவர்னர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் ஜனாதிபதி முடிவெடுக்க வேண்டும்' என, கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது. நாட்டின் வரலாற்றில், ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், 14 கேள்விகளை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் ஜனாதிபதி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ற உச்ச நீதிமன்றம், மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு சார்பில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனு: ஜனாதிபதி, கவர்னர்களுக்கு காலக்கெடு விதிப்பது அரசின் அதிகாரங்களை அபகரிப்பதற்கு சமம். இது, அதிகார சமன்பாட்டை சீர்குலைப்பதோடு, அரசியலமைப்பு குழப்பத்துக்கும் வழிவகுக்கும். அரசியலமைப்பு சட்டப்பிரிவு - 142ல் உள்ள அசாதாரண அதிகாரங்களின்படி, உச்ச நீதிமன்றத்தால் அரசியலமைப்பை திருத்தவோ அல்லது சட்டத்தை உருவாக்கும் அரசின் நோக்கத்தையோ தோற்கடிக்க முடியாது. ஒப்புதல் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க சில வரையறுக்கப்பட்ட சிக்கல்கள் இருக்கலாம். அதற்காக, கவர்னரின் உயர் பதவியை துணை பதவியாக குறைப்பதை நியாயப்படுத்த முடியாது. ஜனாதிபதி, கவர்னர் பதவிகள் அரசியல் ரீதியாக முழுமையானவை. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தை அரசியல் ரீதியாகவும், அரசியலமைப்பு முறையிலும் தீர்க்க வேண்டும். இதில், நீதிமன்றத்தின் தலையீடு முற்றிலும் தேவையற்றது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !