கடன் தள்ளுபடி மஹா., அமைச்சர் சர்ச்சை பேச்சு
மும்பை : “தேர்தல் வெற்றிக்காக, வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வோம் போன்ற வாக்குறுதிகளை அரசியல்வாதிகள் அளிப்பது வழக்கம்,” என, மஹாராஷ்டிரா அமைச்சர் பாபா சாகேப் பாட்டீல் தெரிவித்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த பாபா சாகேப் பாட்டீல், கூட்டுறவுத் துறை அமைச்சராக உள்ளார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அமைச்சர் பாபா சாகேப் பாட்டீல் பேசுகையில், ''தங்களின் கடன்களை அரசு தள்ளுபடி செய்யும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர். ''தேர்தலில் வெற்றி பெறவே, அதிரடி வாக்குறுதிகளை நாங்கள் அளிக்கிறோம். அதில் ஒன்று தான், வங்கி கடன் தள்ளுபடி அறிவிப்பும். எனவே, உண்மையில் என்ன தேவை என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்,” என்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அமைச்சர் பாபா சாகேப் பாட்டீலின் இந்த பேச்சுக்கு, கூட்டணி கட்சியான பா.ஜ., உட்பட எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.