மேலும் செய்திகள்
2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம்
29-Oct-2025
பாட்னா: ''சுதந்திர போராட்ட வீரரும், நாட்டின் முதல் மத்திய உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபபாய் படேலின் 150வது பிறந்த நாள் இன்று துவங்கி, நவம்பர் 15 வரை தேசிய விழாவாக கொண்டாடப்படும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். சிதறுண்டு கிடந்த இந்தியாவை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தவர் வல்லபபாய் படேல். எனவே அவர் நாட்டின் இரும்பு மனிதர் என போற்றப்படுகிறார். இவர், குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டம், கரம்சாத் என்ற கிராமத்தில் 1875, அக்., 31ல் பிறந்தார். இவரது 150வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை தேசிய விழாவாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இது குறித்து பாட்னாவில் நேற்று செய்தியாளர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாள் கொண்டாட்டம் ஆண்டு தோறும் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அவரது 150வது பிறந்த நாள் என்பதால், குஜராத்தின் ஏக்தா நகரில் உள்ள ஒற்றுமை சிலை அருகே மிக சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின அணிவகுப்பை போன்ற மிகப்பெரிய அணிவகுப்பு நடைபெறும். இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். நவம்பர், 15 வரை இந்த கொண்டாட்டங்கள் தேசிய விழாவாக தொடரும். அன்று பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் பிறந்த நாள். அந்த விழாவும் ஒற்றுமை சிலை வளாகத்தில் நடத்தப்படும். மஹாத்மா காந்தியுடன் சேர்ந்து, சர்தார் வல்லபபாய் படேல் நம் சுதந்திரப் போராட்டத்தின் முதுகெலும்பாக இருந்தார். நம் தேசம் ஒன்றுபட்ட நாடாக மாறுவதற்கான அடித்தளத்தை அமைத்தவர். அப்படிப்பட்டவருக்கு காங்கிரஸ் 'பாரத ரத்னா' விருது வழங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
29-Oct-2025