சபரிமலை, அமர்நாத் கோவில்களில் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த முடிவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோவில் முதல் கேரளாவில் உள்ள சபரிமலை வரை நாடு முழுதும், 18 ஆன்மிக தலங்களில் 'ரோப் கார்' திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நெடுஞ்சாலை தளவாட மேலாண்மை லிமிடெட் தலைமையிலான, 'பர்வத்மாலா பரியோஜனா'வின் கீழ் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.இந்த திட்டத்தின் கீழ் உத்தரகண்டில் உள்ள கேதார்நாத் கோவில், ஜம்முவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோவில், ஸ்ரீநகரில் உள்ள சங்கராச்சாரியார் கோவில் ஆகியவற்றுக்கான பணிகள் ஏற்கனவே நடந்து வருகின்றன. இதன்படி, ஜம்மு - காஷ்மீரில் உள்ள அமர்நாத் கோவிலுக்கு பால்டல் பகுதியில் இருந்து 11.6 கி.மீ., துாரத்துக்கு ரோப் கார் சேவை துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பம்பையில் இருந்து, 2.62 கி.மீ., துாரம் ரோப்கார் திட்டம் அமைய உள்ளது.தமிழகத்தில் உள்ள பர்வதமலை, காஷ்மீரின் தாஜிவாஸ் பனிப்பாறை, ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள அமர்கோட்டை, மஹாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி பிறந்த இடமான ஷிவ்னேரி கோட்டை உள்ளிட்ட 18 இடங்களில், இந்த திட்டத்தின் வாயிலாக ரோப் கார் சேவை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.