புதுடில்லி: 'டில்லி மாநகராட்சியிடம், 29 கோடி ரூபாய் நிதியிருந்தும், காற்று மாசு பிரச்னையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை' என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டில்லி மற்றும் என்.சி.ஆர்., எனப்படும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் ஆண்டுதோறும் அக்., - ஜன., வரை காற்று மாசு அபாய கட்டத்துக்கு செல்லும். இந்த ஆண்டும், கடந்த சில நாட்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துள்ளது. இங்கு, கடந்த 10 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. காற்று மாசு குறியீடு, 200க்கு மேல் பதிவானால் ஆபத்து என, மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், டில்லியில் பல இடங்களில் 400க்கும் மேல் பதிவாகி வருகிறது. காற்று மாசை தடுக்க டில்லி மாநகராட்சி பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், டில்லி மாநகராட்சியின் தேசிய துாய்மை காற்று திட்டத்துக்கான, 29 கோடி ரூபாய் நிதி செலவு செய்யப்படாமல் உள்ளது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது. உத்தர பிரதேசத்தின் நொய்டாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அமித் குப்தா, டில்லி மாநகராட்சியில் துாய்மை பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக கேள்வி எழுப்பியிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: டில்லி மாநகராட்சியில் தேசிய துாய்மை காற்று திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் செய்யப்படுகின்றன. சாலைகளை சுத்தம் செய்தல், காற்று தரக் கட்டுப்பாட்டு மையங்களை பராமரித்தல், பசுமை பூங்காக்களை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகள், இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 2023 - 24ம் நிதியாண்டின் துவக்கத்தில், டில்லி மாநகராட்சியின் நிதி, 26.6 கோடி ரூபாயாக இருந்தது. தேசிய துாய்மைகாற்று திட்டத்தின் கீழ் கூடுதலாக, 8.93 கோடி ரூபாயை மாநகராட்சி பெற்றது. இதையடுத்து, மொத்த நிதி, 35.3 கோடி ரூபாயாக உயர்ந்தது. அந்த ஆண்டில், 5.42 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இதையடுத்து, நடப்பு, 2024 - 25ம் நிதியாண்டு துவக்கத்தில், 30.11 கோடி ரூபாய் இருப்பு இருந்தது. இந்த நிதியாண்டில், கூடுதலாக, 75 லட்சம் ரூபாய் வட்டி கிடைத்தது. இதனால், மொத்த நிதி, 30.8 கோடி ரூபாயாக உயர்ந்தது. கடந்த மார்ச்சில், 1.34 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டு துவக்கத்தில் டில்லி மாநகராட்சி வசம், 29.5 கோடி ரூபாய் இருந்தது. இது, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு மாநகராட்சி சமர்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. டில்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், கையிருப்பாக 29 கோடி ரூபாய் வரை நிதியிருந்தும், காற்று மாசை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன் என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கைவசம் உள்ள தொகையை வைத்து, காற்று மாசை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.