டில்லி போலீஸ் கணக்கு தவறு பத்திரிகையாளர் விடுவிப்பு
புதுடில்லி:கிரிமினல் வழக்கு ஒன்றில் பத்திரிகையாளர் ஒருவரை, சந்தேக நபராக தவறாக கருதிய டில்லி போலீசார், மன்னிப்பு கேட்டு, அவரை விடுவித்தனர்.அவுட்டர் டில்லி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பிரேம் நகர் போலீசை சேர்ந்த எஸ்.ஐ., ஏட்டு, போலீஸ்காரர் ஆகிய மூவர், ஒரு வழக்கு தொடர்பான சந்தேகப்படும் குற்றவாளி ராகுல் என்பவரை கைது செய்ய, அவரின் மொபைல் போன் செயல்பாடுகளை ஆராய்ந்தனர்.அப்போது, நொய்டா நகர் அருகே காரில் வந்த ராகுல் ஷா என்ற பத்திரிகையாளரை மடக்கினர். அவர், தன்னை பத்திரிகையாளர் என கூறி, அதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை காட்டினார்.அதன் பின், அவரிடம் மன்னிப்பு கேட்டு, அவரை விட்டு விலகிய போலீசார், உண்மையான குற்றவாளியை பிடிக்கவில்லை.இதுகுறித்து, ஷதாரா போலீஸ் டி.எஸ்.பி., பிரஷாந்த் கவுதம் கூறியதாவது:ராகுல் என்ற குற்றவாளி மீது பி.என்.எஸ்., எனப்படும் பாரதிய நியாய சன்ஹிதாவின் சட்டப்பிரிவுகள் 318 மற்றும் 61ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரைத் தேடிச் சென்ற பிரேம்நகர் போலீசார், தவறுதலாக, ராகுல் ஷா என்ற பத்திரிகையாளரை சுற்றி வளைத்தனர்.நொய்டா நகரில், பெட்ரோல் பங்க் ஒன்றின் அருகே தன் மனைவியுடன் காரில் வந்த அந்த பத்திரிகையாளரை சுற்றி வளைத்த போலீஸ் குழு, உண்மையை அறிந்து கொண்ட பின், அந்த பத்திரிகையாளரை விடுவித்தனர். இதனால், அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.