உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கைதில் இருந்து தப்பிக்க பல முறை இருப்பிடத்தை மாற்றிய டில்லி சாமியார்

கைதில் இருந்து தப்பிக்க பல முறை இருப்பிடத்தை மாற்றிய டில்லி சாமியார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : டில்லியில் தனியார் கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைதான சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி, கைதாவதில் இருந்து தப்பிக்க பல்வேறு ஹோட்டல்களில் மாறி மாறி தங்கியதும், ஆசிரமங்களில் தஞ்சமடைந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலைநகர் டில்லியில் உள்ள வசந்த் கஞ்ச் பகுதியில், 'ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மேனேஜ்மென்ட்' என்ற உயர் கல்வி நிறுவனம் செயல்படுகிறது. இது, கர்நாடக மாநிலம் சிருங்கேரி சாரதா பீடத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. பாலியல் துன்புறுத்தல் இங்கு படிக்கும் மாணவியர் 17 பேருக்கு, கல்வி நிறுவனத்தின் மேலாளராக இருந்த சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி, 62, பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட ஒரு மாணவி மற்றும் விமானப்படை அதிகாரி ஒருவர் எழுதிய கடிதத்தால், இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இது குறித்து, ஆக., 4ல் டில்லி போலீசார் பாலியல் வழக்கு பதிவு செய்தனர். ஜூலை முதல் வெளிநாட்டில் இருந்த சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி, ஆக., 6ல் நாடு திரும்பினார். தன் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்த அவர் தலைமறைவானார். தொடர்ந்து அவரை பிடிக்க, 'லுக் அவுட்' எனப்படும், 'தேடப்படும் நபர்' என்பதற்கான நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. 40 நாட்களுக்கும் மேல், 'டிமிக்கி' கொடுத்து வந்த சாமியார் சைதன்யானந்த சரஸ்வதியை, உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில், டில்லி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: கைதில் இருந்து தப்பிக்க, சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி பல முறை இருப்பிடத்தை மாற்றி உள்ளார். 40 நாட்களில், 13 ஹோட்டல்களில் மாறி மாறி அவர் தங்கியுள்ளார். 'சிசிடிவி' கேமரா மற்றும் சரிவர கண் காணிப்பு இல்லாத சிறிய ஹோட்டல்களை தேர்வு செய்து அவர் தங்கி உள்ளார். போலீஸ் கண்காணிப்பில் சிக்காமலிருக்க, தன் மூன்று மொபைல் போன்களை அவர் பயன்படுத்தவில்லை; தன் உதவியாளரின் மொபைல் போனை பயன்படுத்தி, ஹோட்டல்களில் அறைகளை அவர் பதிவு செய்துள்ளார். வேண்டுமென்றே எளிமையான மற்றும் ஆடம்பரமற்ற ஹோட்டல்களை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். மேலும், உ.பி.,யின் மதுரா மற்றும் பிருந்தாவனத்தில் உள்ள பல ஆசிரமங்களில் சாதுக்களுடன் அவர் தஞ்சம் அடைந்துள்ளார். விசாரணையில், பல்வேறு கேள்விகளுக்கு சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி பதில் அளிக்கவில்லை. நேரடி தொடர்பு மூச்சு திணறல் இருப்பதாகக் கூறி நேரத்தை கடத்த முயன்றார். மொபைல் போன்கள், ஐபேடு ஆகியவற்றின் கடவுச்சொற்களை அவர் பகிரவில்லை. அவரது மூன்று போன்களும் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அவரிடம் இருந்து போலி விசிட்டிங் கார்டுகள் மற்றும் பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சாமியார் சைதன்யானந்த சரஸ்வதியும், அவரது கூட்டாளிகளும் பிரதமர் அலுவலகத்துடன் நேரடி தொடர்பு இருப்பதாக கூறி, அதிகாரிகளையும் ஏமாற்றி உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை