அனுமதி கிடைத்ததா?
சமீபத்தில் தமிழகத்திலிருந்து எம்.பி.,யானவர் அவர்; ராகுலுக்கு நெருக்கமானவர் கூட. அடுத்த பிரதமர் ராகுல் தான் என, அடித்துச் சொல்லி வருகிறார். சமீபத்தில் இவர் செய்த ஒரு விஷயம், டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.இந்த தமிழக எம்.பி., சக காங்., -- எம்.பி.,க்கள் சிலரை, டில்லியிலுள்ள டென்மார்க் நாட்டு துாதரகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு டென்மார்க்கின் இந்திய துாதருடன் காலை உணவருந்தி உள்ளனர். அப்போது, 'தமிழகத்தில் டென்மார்க் அரசு புதிய தொழில்களை தொடங்க வேண்டும்' என, அவர்கள் பேசினராம்.இந்த விவகாரம், பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 'தமிழக முதல்வர் விஜய்க்கு நெருக்கமானவர் என்பதை தெரியப்படுத்த அந்த எம்.பி., இப்படி செயல்படுகிறாரா அல்லது அடுத்தது காங்., ஆட்சி தான் என்பதற்காக இப்படி செயல்படுகிறாரா' என, கேள்விகள் எழுந்துள்ளன.'எந்தவொரு அமைச்சரோ அல்லது எம்.எல்.ஏ., - எம்.பி.,யோ வெளிநாட்டு துாதர்களை சந்திக்க வேண்டுமெனில், முதலில் வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும். எதற்காக இந்த சந்திப்பு; என்ன பேச போகின்றனர் என்பது குறித்து வெளியுறவுத் துறைக்கு தெரிவிக்க வேண்டும். அனுமதி கிடைத்த பின் தான் சந்திக்க வேண்டும். இப்படிப்பட்ட அனுமதி தமிழக எம்.பி.,க்களுக்கு கிடைத்ததா என்பதே சந்தேகம்' என்கின்றனர்.கருத்துக்கள் சொல்ல: dinamalar.in