ஜார்க்கண்ட் தேர்தலுக்கான விளம்பர துாதரானார் தோனி
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான விளம்பர துாதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை, தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. 81 சட்டசபை தொகுதிகளுடைய இம்மாநிலத்தில், நவ., 13 மற்றும் 20ல், இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது; நவ., 23ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.இந்நிலையில், சட்டசபை தேர்தலில் ஓட்டளிப்பதன் அவசியத்தை வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை, சட்டசபை தேர்தலுக்கான விளம்பர துாதராக தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.இதுகுறித்து ஜார்க்கண்ட் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரவிக்குமார் கூறுகையில், “சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தலில் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி, மகேந்திர சிங் தோனியை கேட்டுக் கொண்டோம்.“இதை ஏற்று, விளம்பர துாதராக செயல்பட அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் ஓட்டுப்பதிவு அதிகரிக்கும் என நம்புகிறோம்,” என்றார்.